திருவாடானை தாலுகாவில் ஜமாபந்தி: கலெக்டர் தலைமையில் நடந்தது


திருவாடானை தாலுகாவில் ஜமாபந்தி: கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 May 2018 11:11 PM GMT (Updated: 15 May 2018 11:11 PM GMT)

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் நடராஜன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

தொண்டி,

மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. அதன்படி திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது. முதல் நாளான நேற்று ஆனந்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட சாத்தனூர், ஆணையார்கோட்டை, ராதானூர், கோவிந்தமங்களம், ஓடக்கரை, ஆனந்தூர், திருத்தேர்வலை, கொக்கூரணி, சேத்திடல், வரவணி, செங்குடி ஆகிய 11 வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது.

அப்போது நில அளவை கருவிகள் சரியான நிலையில் உள்ளனவா? என்பது குறித்தும், வருவாய் கிராம கணக்குகள் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பது குறித்தும் கலெக்டர் தணிக்கை செய்தார். மேலும் இந்த தணிக்கையின் போது அந்த கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். வட்டாணம் கிராமப்பகுதி மக்கள் தங்களது கிராமத்தில் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர். அதனை தொடர்ந்து உடனடியாக வட்டாணம் கிராமத்தில் புதிதாக உப்புநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஊராட்சிகளின் உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

இதேபோல சேத்திடல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தில் புதிய குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டி கோரிக்கை மனு வழங்கினர். அதனை தொடர்ந்து சேத்திடல் கிராமத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஆழ்குழாய் கிணறு அமைக்க உத்தரவிட்டார். இதுதவிர பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 10 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இன்று (புதன்கிழமை) ஆர்.எஸ்.மங்கலம் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 17-ந்தேதி மங்களக்குடி உள்வட்டத்திற்கும், 18-ந்தேதி புல்லூர் உள்வட்டத்திற்கும், 22-ந்தேதி சோழந்தூர் உள்வட்டத்திற்கும், 23-ந்தேதி தொண்டி உள்வட்டத்திற்கும், 24-ந்தேதி திருவாடானை உள்வட்டத்திற்கும் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற உள்ளது.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் தணிக்கை முகாம்களில் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி உடனடி தீர்வு காணலாம். நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நில அளவை) ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, கலெக்டர் அலுவலக மேலாளர் கோவிந்தன், திருவாடானை தாசில்தார் சாந்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் நடராஜன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார். தாசில்தார் மீனாட்சி, நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சங்க பொருளாளர் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில் முதுகுளத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும், நலிந்தோர் உதவி திட்டம், பட்டா மாறுதல், பயிர் இன்சூரன்சு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். மேலும் இதில் முதுகுளத்தூர் வடக்கு உள்வட்ட கிராமங்களான மேலமுதுகுளத்தூர், கீழமுதுகுளத்தூர், புல்வாய்க்குளம், நல்லூர், கீரனூர், மணலூர், ஆனைசேரி ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை செய்யப்பட்டது.

முடிவில் மண்டல துணை தாசில்தார் ஸ்ரீதர் நன்றி கூறினார். 

Next Story