ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் மந்திரி பதவி பங்கீட்டில் இழுபறி


ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் மந்திரி பதவி பங்கீட்டில் இழுபறி
x
தினத்தந்தி 22 May 2018 5:15 AM IST (Updated: 22 May 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2 துணை முதல்-மந்திரி மற்றும் சபாநாயகர் பதவிகளை காங்கிரஸ் கேட்பதால் ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் கட்சிகள் இடையே மந்திரி பதவிகளை பங்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடக சட்ட சபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 15-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி கனியை பறித்தனர்.

ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே, தொங்கு சட்டசபை தான் அமையும் என்பதை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி தானாக முன்வந்து, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அவசர அவசரமாக அறிவித்தது. அதிக தொகுதியில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட குறைந்த எண்ணிக்கையில் இடங்களை பெற்ற கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது நாடு முழுவதும் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.

பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டு இந்த முடிவை அறிவித்தது. மேலும் சுயேச்சைகள் 2 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்படி ஜனதா தளம்(எஸ்)-காங்கிரஸ் கூட்டணியின் பலம் 118 ஆனது. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 111 ஆகும்.

இந்த நிலையில் பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரின. பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசத்தை கவர்னர் வழங்கினார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு காலஅவகாசத்தை குறைத்தது. அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபை கூடியது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி பதவி ஏற்பு விழா நாளை(புதன்கிழமை) பெங்களூருவில் கோலாகலமாக நடத்த தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை பங்கு பிரித்து கொள்வது குறித்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக மந்திரிசபையில் மொத்தம் முதல்-மந்திரி பதவி உள்பட 34 மந்திரி பதவிகள் உள்ளன. இவற்றில் 20 மந்திரி பதவி காங்கிரசும், 14 மந்திரி பதவி ஜனதா தளம்(எஸ்) கட்சியும் பகிர்ந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலை போகாமல் கட்டிக்காத்த பெருமைக்குரியவரும் முக்கிய தலைவராக உருவெடுத்து இருப்பவருமான டி.கே.சிவக்குமாருக்கு கட்சியின் மாநில தலைவர் பதவியை வழங்க அக்கட்சி மேலிடம் விரும்புவதாக தெரிகிறது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க விரும்பும் டி.கே.சிவக்குமார், முக்கிய இலாகாவுடன் துணை முதல்-மந்திரி பதவியை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் மாநில காங்கிரஸ் தலைவராக இருக் கும் தலித் சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வருக்கு போலீஸ் இலாகாவுடன் துணை முதல்-மந்திரி வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

மேலும் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அந்த சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏனென்றால் முதல்-மந்திரி பதவி ஒக்கலிகர் சமூகத்திற்கு கிடைத்துள்ளதால், அதே சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேலிடத்திடம் கூறுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் 2 துணை முதல்-மந்திரி பதவியை காங்கிரசுக்கு வழங்க தேவேகவுடா தயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் துணை முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் காங்கிரசில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சட்டசபை கூட்டத்தை நடத்துவது மற்றும், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால், அதனால் ஏற்படும் நெருக்கடியான நிலையை சமாளிப்பதில் சபாநாயகர் பதவி மிக முக்கியமான பங்கு ஆற்றுகிறது. அதனால் சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் போட்டி போட்டு வருகின்றன. மேலும் காங்கிரஸ் கட்சியில் மந்திரி பதவியை கைப்பற்ற பலமான போட்டி எழுந்துள்ளது.

இதுகுறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரி பதவியை தங்களுக்கு வழங்குமாறு முன்னாள் மந்திரிகள் மற்றும் மூத்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளதால், எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் நிறைவடைந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் இன்று(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், வேணுகோபால் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது, துணை முதல்-மந்திரி பதவி குறித்து சில தகவல்களை ராகுல் காந்தியிடம் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே சித்தராமையா தனது மகன் டாக்டர் யதீந்திராவுக்கு மந்திரி பதவியை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். மேலும் மந்திரி பதவி கேட்டு சித்தராமையாவை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதனால் நாளை நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், குமாரசாமி மட்டும் பதவி ஏற்பாரா? அல்லது அவருடன் சேர்ந்து மந்திரிகளும் பதவி ஏற்பார்களா? என்பது குறித்து இன்னும் ஒரு தெளிவான தகவல் இல்லாமல் உள்ளது. புதிய மந்திரிகள் யார்-யார்? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) கட்சி தங்களுக்கு கிடைக்கும் 14 மந்திரிகளில் முதல்-மந்திரியை தவிர்த்து, ஒக்கலிகர் சமூகத்திற்கு 5 மந்திரி பதவியும், தலித், பழங்குடியின, குருபா, லிங்காயத், முஸ்லிம் ஆகிய சமூகங்களுக்கு தலா ஒரு மந்திரி பதவியையும், கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு மந்திரி பதவியும் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை குமாரசாமி நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர்.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் மந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்வது குறித்து அவர்கள் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். மந்திரி பதவிகளையும், முக்கிய இலாகாக்களையும் பங்கு பிரிப்பதில் இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில் இந்த கூட்டணி ஆட்சி 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதா கூறி வருகிறது.

Next Story