கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மரத்தில், தலைகீழாக தொங்கும் பழந்தின்னி வவ்வால்கள்


கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் மரத்தில், தலைகீழாக தொங்கும் பழந்தின்னி வவ்வால்கள்
x
தினத்தந்தி 22 May 2018 4:15 AM IST (Updated: 22 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள மரத்தில், ஏராளமான பழந்தின்னி வவ்வால்கள் தலைகீழாக தொங்கும் காட்சியை அந்த பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள். இயற்கை பாதுகாவலனாக திகழும் இந்த வவ்வால்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் பழந்தின்னி வவ்வால்கள் பெருமளவில் காணப்படுகிறது. கோடியக்காட்டில் உள்ள ராமர்பாதம் அருகில் இருக்கும் மரங்களில் ஆயிரக்கணக்கில் தலைகீழாக தொங்கி கொண்டிருப்பது பார்ப்பதற்கு அரிய காட்சியாக உள்ளது.

மரம் முழுவதும் வவ்வால்கள் தொங்கிக்கொண்டு இருக்கும் காட்சியை காலை வேளையில் பார்ப்போரின் கண்களுக்கு ஏதோ கருப்பாக கூடு போல காட்சி அளிக்கிறது. இந்த வவ்வால்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள்.

இந்தவகை பழந்திண்ணி வவ்வால்கள் குறித்து கோடியக் கரையை சேர்ந்த ஓய்வு பெற்றவனச்சரக வனவரும், பறவைகள் ஆர்வலருமான கோவிந்தராஜன் கூறியதாவது:-

இந்த வவ்வால்கள் பறக்கக்கூடிய முதுகெலும்புள்ள பாலூட்டி இனத்தை சேர்ந்தவை. வவ்வால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் பாலூட்டி வகைகளில் வவ்வால் இனம் மட்டுமே 20 சதவீதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வவ்வால்கள் பெரும்பாலும் எலி போன்ற சிறிய முகத்துடன், பூச்சிகளை உண்பனவாகவும் உள்ளன. சிலவகை வவ்வால்கள் நரியின் முகத்தோடும், சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் இறக்கைகள் வழு,வழுப்பாக இருக்கும்.

பழந்தின்னி வவ்வால்கள், இந்த பருவ காலத்தில் கோடியக்காடு பகுதியில் உள்ள பழ வகை மரங்களில் குடிகொண்டு இருக்கும். தற்போதுவேதாரண்யம் நகர்ப்புறத்தில் இலுப்பை, புளி, மா உள்ளிட்ட பழந்தரும் மரங்கள் அடர்ந்த இடங்களிலும் காணப்படுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் இரவு நேரங்களில் 48 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் வல்லமையுடையது.

இவைகள் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும். பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும். ஆனால் வாழைப்பழம் போன்ற மிருதுவான பழங்களை முழுவதுமாக தின்று விடும். இவை மலர்களில் உள்ள தேனையும் குடிக்கும். வவ்வால்கள் விளைநிலங்களில் உள்ள பயிர்களை தின்று விடுவதால் விவசாயிகளின் எதிரியாக கருதப்படுகிறது.

தற்போது கோடியக்கரை பகுதியில் உள்ள பழந்தின்னி வவ்வால்கள் இருள் சூழ தொடங்கிய நிலையில் ஒரே கூட்டமாக இலங்கை பக்கம் சென்று அங்குள்ள பழ மரங்களில் தங்களுக்கு வேண்டிய உணவுகளை உட்கொண்டு அன்று இரவே தங்களது இருப்பிடத்திற்கு திரும்பி வந்து விடும் வல்லமை கொண்டது. சில வவ்வால்கள் கோடியக்கரையில் இருந்து மேற்கு நோக்கி பறந்து தஞ்சை, திருச்சி பகுதிகள் வரையில் செல்வதாகவும், பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வேதாரண்யம்- நாகை சாலையிலும் ஆயக்காரன்புலம் பகுதிகளிலும் நிறைய வவ்வால்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இலுப்பை மற்றும் மாமரங்களில் காணப்படுகிறது. இந்த வவ்வால்களை அசைவ பிரியர்கள் வேட்டையாடி உண்பதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

இயற்கையில் விதை பரவுதலுக்கு இயற்கை பாதுகாவலனாக விளங்கும் இந்த வவ்வால்கள் வேட்டை யாடப்படுவதை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story