தமிழகம் முழுவதும் 29-ந் தேதி 80 சதவீத டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் 29-ந் தேதி 80 சதவீத டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.
விழுப்புரம்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டம் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கான பிரசார விளக்க கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத்தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், சரவணன், துணை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் நிர்வாகிகள் வீரப்பன், ரகோத், ரமேஷ், அன்பழகன், சக்திவேல், பிரபாகரன், விஜயகுமார், அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. டாஸ்மாக் பணியாளர்கள் உரிய கல்வித்தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும், அரசின் ஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 480 நாட்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்வதுடன், அவர்களுக்கு காலமுறை ஊதியமும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுநாள் வரை டாஸ்மாக் பணியாளர்களுக்கு அது வழங்கப்படவில்லை.
மேலும் ஏற்றுகூலி, இறக்குகூலி இவற்றையும் டாஸ்மாக் நிர்வாகம் வழங்காததால் பணியாளர்களே அதை செலுத்தி வருகின்றனர். கடைகளில் திருட்டு போகும் பணத்தையும், டாஸ்மாக் பணியாளர்கள்தான், நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இறந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்திற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. அவர்களது வாரிசுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்கவில்லை.
நீதிமன்ற உத்தரவின்படி கடைகள் மூடப்பட்டதால் அதனால் பணி இழப்புக்கு ஆளாகும் பணியாளர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பதில்லை. சிலருக்கு வெவ்வேறு டாஸ்மாக் கடைகளில் மாற்றுப்பணி வழங்குவதிலும் பல முறைகேடுகள் நடந்து வருகிறது.
இதுபோன்று டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகளில் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. இதனை கண்டித்தும், டாஸ்மாக் பணியாளர்களின் 30 அம்ச கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தியும் வருகிற 29-ந் தேதி ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதில் 80 சதவீத டாஸ்மாக் பணியாளர்கள் கலந்துகொண்டு பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story