நெல்லையில் பரபரப்பு: அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது பெட்ரோல் குண்டு வீச்சு 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு


நெல்லையில் பரபரப்பு: அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது பெட்ரோல் குண்டு வீச்சு 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு
x
தினத்தந்தி 25 May 2018 3:00 AM IST (Updated: 25 May 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 4 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கற்களை வீசி மர்மநபர்கள் உடைத்தனர்.

நெல்லை, 

நெல்லையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 4 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கற்களை வீசி மர்மநபர்கள் உடைத்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே ஒரு மர்ம கும்பல் வந்தது. அந்த கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் பெட்ரோல் குண்டு ஒன்றை அரசு பணிமனை மீது வீசியது.

ஆனால் அந்த பெட்ரோல் குண்டு, அரசு பஸ் மீது விழாமல் வேறு இடத்தில் விழுந்து தீப்பிடித்தது. உடனடியாக பணிமனை காவலாளிகள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார். அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

பஸ்கள் மீது கல்வீச்சு

இதேபோல் நேற்று பல இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து நெல்லையை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. புதிய பஸ்நிலையம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம கும்பல் அந்த பஸ் கண்ணாடியை கல்வீசி தாக்கியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் ஒரு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ் கண்ணாடி மீதும் மர்ம கும்பல் கற்களை வீசி உடைத்தனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ரோட்டில் சென்று கொண்டு இருந்த அரசு டவுன் பஸ் மீதும், பாளையங்கோட்டை ஆச்சிமடம் அருகே சென்ற அரசு பஸ் மீதும் மர்ம கும்பல் கற்களை வீசி தாக்கினார்கள். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

வருமானவரித்துறை அலுவலகம்

பாளையங்கோட்டையில் உள்ள திருச்செந்தூர் ரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பக்க கண்ணாடியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கற்களை வீசி உடைத்து விட்டு தப்பி சென்றது.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை, பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ரோந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மத்திய அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த சம்பவங்களால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story