வாலாந்தரவை இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் கைது


வாலாந்தரவை இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 May 2018 10:15 PM GMT (Updated: 30 May 2018 7:34 PM GMT)

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் மதுரையில் பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் இருதரப்பினரிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமிநாதன், விஜய் ஆகிய இரு வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், பிரகாஷ், அருண், மோதிமகேசுவரன் ஆகியோர் சரணடைந்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மேலும் 7 பேரை கைது செய்துள்ளனர். இதன்மூலம் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 21 பேரில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 11 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

மேலும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தில் கைது செய்யப்படும் மீதம் உள்ள அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கவும், தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதால் வாலாந்தரவை பகுதியில் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் கொண்ட தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தர்மா என்பவர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தேடிப்பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்று கிடைத்த தகவலை தொடர்ந்து 3 தனிப்படை போலீசார் பயண விவரங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்துள்ள கார்த்திக், பிரகாஷ், அருண் ஆகியோர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டுஉள்ளனர். சம்பவத்தின்போது அவர்கள் பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் தூக்கி வீசப்பட்டிருந்த இடங்களில் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அந்த 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால் அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. இதுதவிர இறுதியாக சரணடைந்த உடைச்சியார் வலசையை சேர்ந்த மோதி மகேஸ்வரனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய பெருங்குளம் நாகசுந்தரம் மகன் முத்துமாரி(28) என்பவர் மதுரையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மீது 36 வழக்குகளும், அவரின் அண்ணன் தர்மா மீது 18 வழக்குகளும் இருப்பதால் போலீசாரின் தீவிர கவனத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுஉள்ளது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் நிலைய போலீஸ்காரர் ஒருவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்குள்ள சிலரை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.


Next Story