வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: மாவட்டம் முழுவதும் ரூ.175 கோடி வர்த்தகம் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.175 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. இதன்காரணமாக, வங்கியில் பணம் டெபாசிட் செய்தல், காசோலை மாற்றம், பண பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.
வேலைநிறுத்தத்தை முன்னிட்டு கடந்த 29-ந்தேதியே ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்பட்டிருந்தது. இருப்பினும் மறுநாளே பெரும்பாலான மையங்களில் பணம் தீர்ந்துவிட்டது. நேற்று சில மையங்களில் மட்டுமே பணம் இருந்ததால் அங்கு பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து சென்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு பணம் எடுக்க முடியாமல் பெற்றோர்கள் அவதி அடைந்தனர். மேலும், அவசர தேவைகளுக்கு கூட பணம் எடுக்க முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 200 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை சேர்ந்த 1,500 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, கடந்த 2 நாட்களில் காசோலை மாற்றம், பணபரிமாற்றம் உள்பட ரூ.175 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
சில ஏ.டி.எம்.களில் நேற்று முன்தினமே பணம் தீர்ந்துவிட்டது. இருப்பினும், சில தனியார் வங்கிகள் தொடர்ந்து இயங்கியதால் அங்குள்ள ஏ.டி.எம். மையங்களில் போதுமான பணம் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இன்று வழக்கம்போல வங்கிகள் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story