தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் 2–வது நாளாக விசாரணை


தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் 2–வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2018 3:00 AM IST (Updated: 4 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நேற்று 2–வது நாளாக விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் நேற்று 2–வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் பதில்களை பதிவு செய்து கொண்டனர்.

தேசிய மனித உரிமை ஆணையம் 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கடந்த 22–ந் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் 5 பேர் குழு நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தது.

இந்த குழுவில் போலீஸ் சூப்பிரண்டு புபுல் பிரிட்டோ பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங், இன்ஸ்பெக்டர்கள் லால் பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு ஆகிய இடங்களில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டனர்.

2–வது நாளாக... 

தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேற்று 2–வது நாளாக தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அதன்படி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். இதில் இறந்த 6 பேரின் உறவினர்களும், காயம் அடைந்த 7 பேரும் விசாரணைக்கு வந்து இருந்தனர்.

அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு புபுல் பிரிட்டோ பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பீர்சிங் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் குழுவில் உள்ள 2 உறுப்பினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

பல்வேறு கேள்விகள் 

இந்த விசாரணையின் போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில்தான் இறந்தார்களா?, அதுதொடர்பான காயத்தை பார்த்தீர்களா?, போலீசார் வீட்டுக்கு வந்து மிரட்டினார்களா?, இறந்தவர் போராட்டத்துக்கு செல்வதாக கூறி விட்டு சென்றாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆணையத்தினர் கேட்டனர். இதற்கான பதில்களை பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையே மனித உரிமை ஆணையம் விசாரணை கோரி வழக்கு தொடர்ந்த வக்கீல் ராஜராஜன் கூறும் போது, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அந்த ஆணையத்திடம் சில கோரிக்கைகள் வைத்து உள்ளோம். மக்கள் தமிழில் சொல்வதை, ஒரு அதிகாரி மொழி பெயர்த்து ஆணைய உறுப்பினர்களிடம் தெரிவித்து வருகிறார். இதில் ஏதேனும் விடுபட வாய்ப்பு இருக்கிறது. இதனால் மக்கள் எழுத்துப்பூர்வமாக கொடுக்கும் மனுக்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதனை ஆணையக் குழு ஏற்றுக்கொண்டு உள்ளது என்று கூறினார்.

Next Story