மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் தாமதம்


மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் தாமதம்
x
தினத்தந்தி 5 Jun 2018 5:15 AM IST (Updated: 5 Jun 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அலுவல் ஆய்வுக்குழு கூட்டமும் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று சபாநாயகர் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்–அமைச்சர் நாராயணசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபால் மற்றும் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலாளர் கந்தவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள், பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். புதுவை பட்ஜெட்டிற்கு அனுமதி பெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டினார்கள்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்டி சட்டமன்ற அமர்வு நாட்கள் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து கூட்டத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் பாதியிலேயே ரத்து செய்தார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மத்திய அரசு ஏன் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பினோம். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. புதுவையில் இரட்டை ஆட்சி நடக்கிறது. பட்ஜெட்டிற்கு அனுமதி பெறவேண்டிய நிதித்துறை செயலாளர் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எதுவானாலும் அதிகாரிகள் நினைத்தால்தான் நடக்கும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். எனவே பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை இறுதிசெய்துவிட்டு அலுவல் ஆய்வுக்குழு கூட்ட வலியுறுத்தினோம். இதனால் அலுவல் ஆய்வுக்குழுவில் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும். இதற்காக கவர்னர் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டு பட்ஜெட்டை இறுதி செய்து 4 வாரத்துக்கு முன்பு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

அதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியது. நிதி மந்திரி தற்போது ஓய்வில் இருப்பதால் அந்த பொறுப்பினை மத்திய மந்திரி பியூஸ்கோயல் கவனித்து வருகிறார். அவரை தொடர்புகொண்டு பேசினேன். அதன்பின் அவரது ஒப்புதல் பெற்று மீண்டும் உள்துறைக்கு வந்துள்ளது. உள்துறையிடமிருந்து மீண்டும் நமக்கு வரவேண்டும்.

அந்த ஒப்புதல் வந்தபின்பு பட்ஜெட் தேதியை அறிவிப்போம். மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறோம். இதற்கு புதுவை மாநில அரசோ, அதிகாரிகளோ பொறுப்பு கிடையாது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுவை சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசின் அனுமதி கிடைக்காத நிலையில் வருகிற 8–ந்தேதியோ அதற்கு பின்னரோதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.


Next Story