புளியந்தோப்பில் முதியவர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 5 பேர் கைது


புளியந்தோப்பில் முதியவர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 4:15 AM IST (Updated: 7 Jun 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

புளியந்தோப்பில் முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான தாய்-மகன் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராதா (வயது 63). நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டின் அருகில் உள்ள டீ கடைக்கு சென்ற ராதாவை, காரில் வந்த 7 பேர் கொண்ட மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் பிரபல ரவுடி சின்னா மற்றும் வக்கீல் பகத்சிங் ஆகிய 2 பேரை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ்(42) மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லியில் வெட்டிக்கொலை செய்தனர். அதன் பிறகு சுரேஷின் எச்சரிக்கையால் சின்னாவின் கோஷ்டியினர் அனைவரும் புளியந்தோப்பில் இருந்து வெளியேறி விட்டனர்.

ஆனால் சின்னாவிடம் கணக்கு பிள்ளையாக இருந்த ராதா மட்டும் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்ததுடன், சுரேஷின் நடவடிக்கைகளை கண்காணித்து சின்னா கோஷ்டியினருக்கு தகவல் தெரிவித்து வந்ததாகவும், இதை தட்டிக்கேட்ட ஆற்காடு சுரேஷின் 2-வது மனைவி அஞ்சலை (50) மற்றும் அஞ்சலையின் முதல் கணவருக்கு பிறந்த மகன் எழில் (25) ஆகியோரிடம் அவர் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே ஆற்காடு சுரேஷ், அஞ்சலை, எழில் ஆகியோர் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ராதாவை வெட்டிக்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பெண் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள காலி மைதானத்தில் பதுங்கி இருந்த இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான பட்டாளத்தை சேர்ந்த குபி என்ற குபேந்திரன் (29), அம்பத்தூரைச் சேர்ந்த சத்யா என்ற செங்குட்டுவன் (36), திருமுல்லைவாயலை சேர்ந்த ரவி என்ற ரவிசந்திரன் (32) மற்றும் புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்த ராஜேஷ் என்ற ஹேங்கில் ராஜ் (36) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அஞ்சலை, அவருடைய மகன் எழில் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான ஆற்காடு சுரேஷ் மீது ஆந்திராவில் உள்ள விஜயவாடா போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கும், சென்னை சைதாப்பேட்டை, புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ், சேலையூர், பூந்தமல்லி, ஓட்டேரி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, மாமூல், ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

Related Tags :
Next Story