பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு தயாராக இல்லை- கே.பாலகிருஷ்ணன் பேட்டி


பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு தயாராக இல்லை- கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2018 11:00 PM GMT (Updated: 11 Jun 2018 7:31 PM GMT)

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தமிழக அரசு தயாராக இல்லை என கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கடலூர் முதுநகர்

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடுவோம் தமிழகமே என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்க பயணம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் தட்சணாமூர்த்தி, ஆளவந்தார், பாஸ்கரன், பழனிவேல், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அமர்நாத் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாநிலம் தழுவிய பிரசார இயக்க வாகனத்தை தொடங்கி வைத்து பேசினார்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், கடலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் மாதவன், வாலண்டினா, மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், ரமேஷ்பாபு, சுப்புராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சிப்காட் செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.

முன்னதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போராடுவோம் தமிழகமே என்கிற பிரசார இயக்க பயணம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூரில் தொடங்கும் பிரசார இயக்க பயணக்குழு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) திருச்சியில் நிறைவடைகிறது. அன்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அங்கு நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரசார இயக்க பயணக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர் சீத்தாராம்யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

தற்போது தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்ய இந்த அரசுக்கு திராணி இல்லை. உச்சநீதிமன்றமே அவருக்கு முன்ஜாமீன் கொடுக்க முடியாது என கூறிவிட்ட பிறகும் கூட தமிழக அரசு எஸ்.வி. சேகரை கைது செய்ய தயாராக இல்லை.

ஆனால் கோவையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தனியார் தொலைக் காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் அமீர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்ய சம்மன் அனுப்புகிறது. எனவே இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தாங்கி பிடித்து வருகிறது. ஒவ்வொரு பகுதி மக்களின் வாழ்வு இன்று நாசமாகி கொண்டு இருக்கிறது.எனவே மத்திய, மாநில அரசுகளை அப்புறப்படுத்துவோம். அடித்தட்டு மக்களின் நலனை பாதுகாப்போம். அதற்காக தான் போராடுவோம் தமிழகமே பிரசார இயக்க பயணத்தை தொடங்கி உள்ளோம்.

பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் தமிழகத்துக்கு வருவதாக தெரிகிறது. அவர் சென்ற இடங்களில் மத பிரச்சினைகள் உருவாகி உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு அமித்ஷா நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story