குட்டையில் விளையாடியபோது பரிதாபம்: மண் சரிந்து விழுந்து 2 மாணவிகள் சாவு


குட்டையில் விளையாடியபோது பரிதாபம்: மண் சரிந்து விழுந்து 2 மாணவிகள் சாவு
x
தினத்தந்தி 18 Jun 2018 4:45 AM IST (Updated: 18 Jun 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

குட்டையில் விளையாடியபோது மண் சரிந்து விழுந்து 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குத்தாலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் மகள் சியாமளா (வயது 10), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் மகள் வர்ஷினி (12). சியாமளா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பும், வர்ஷினி 7-ம் வகுப்பும் படிந்து வந்தனர். கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் ராஜகாலனி கீழத்தெருவை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி வீட்டுக்கு விருந்தாடியாக மாணவி சியாமளாவும், வர்ஷினியும் வந்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள கொம்புகாரன் குட்டையில் ஆழமாக மண் எடுக்கப்பட்ட குழிகளில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். 2 பேரும் இறங்கி விளையாடிய குழியில் மண் சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் சிக்கினர். இதனால் அவர்கள் அலறினர். சத்தம் கேட்டு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகள் 2 பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108-க்கு போன் செய்தனர். வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதனால் உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லாததால், அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சியாமளாவும், வர்ஷினியும் பரிதாபமாக இறந்தனர். இந்தசம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

குட்டையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண் எடுக்கப்பட்டதாகவும், மண் எடுத்த பின்னர் அந்த குழியை சரிசெய்யாமல் விட்டுச்சென்றதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். உறவினர் வீட்டிற்கு விருந்தாடியாக வந்த 2 மாணவிகளும் மண் சரிவினால் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, உதவி கலெக்டர் தேன்மொழி, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அரசு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story