கிணற்றுக்கு வைத்த வெடியில் சிதறிய கல் விழுந்து மோட்டார்சைக்கிளில் சென்றவர் சாவு


கிணற்றுக்கு வைத்த வெடியில் சிதறிய கல் விழுந்து மோட்டார்சைக்கிளில் சென்றவர் சாவு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:30 AM IST (Updated: 24 Jun 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே கிணற்றுக்கு வைத்த வெடியில் சிதறிய கல் மோட்டார்சைக்கிளில் சென்றவர் தலையில் விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

வேட்டவலம்,

வேட்டவலம் அருகே அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவருடைய மகன் சிவா (வயது 19), பெங்களூருவில் ரோடு ரோலர் டிரைவராக உள்ளார். இவரும், அவரது உறவினர் சக்திவேல் இருவரும் நேற்று முன்தினம் அண்டம் பள்ளம் கிராமத்தில் இருந்து ஆவூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

ஆங்குணம் அருகே சென்றபோது, அதே ஊரை சேர்ந்த அன்பழகனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றுக்கு வெடி வைத்து தூர்வாரும் பணி நடந்து கொண்டிருந்தது.

அப்போது கிணற்றுக்குள் வைத்த வெடி வெடித்து, கிணற்றில் இருந்து சிதறிய ஒரு கல் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிவாவின் தலையில் விழுந்தது. இதில் சிவா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். இந்த நிலையில் இரவு சுமார் 10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சிவாவின் உறவினர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் கிணற்றில் வெடி வைக்க பயன்படுத்தப்பட்ட நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் தோட்டா வண்டியை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

Next Story