தூத்துக்குடியில் தீ விபத்து: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வீடுகள் எரிந்து சேதம்

தூத்துக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
தீ விபத்து
தூத்துக்குடி கிருபை நகர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் பழைய கழிவு குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டு இருந்தன. இந்த குப்பையில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால், அருகில் இருந்த ராக்கம்மாள், கோக்காயி ஆகியோரின் குடிசை வீடுகளுக்கு தீ பரவியது. 2 வீடுகளும் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் குமரேசன், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி அமுதா, காமாட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்துக் கொண்டு இருந்தனர்.
தண்ணீர் தொட்டி சேதம்
அந்த சமயத்தில் சம்பவம் நடந்த இடத்தின் இருந்து சிறிது தூரத்தில் மாநகராட்சியின் 4–வது குடிநீர் குழாய் திட்டத்துக்காக ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. 60 அடி உயர தொட்டியின் மேல் பகுதியில் கம்புகள் மற்றும் பிளாஸ்டிக் அட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. காற்றின் வேகத்தில் பறந்து சென்ற தீக்கனல், நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் விழுந்து உள்ளது. இதனால் அங்கு இருந்த கம்புகள் மற்றும் பிளாஸ்டிக் அட்டைகள் மளமளவென தீப்பற்றி எரிந்தன.
உடனடியாக தீயணைப்பு படையினர் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story