மின்சார ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்


மின்சார ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்
x
தினத்தந்தி 30 Jun 2018 5:51 AM IST (Updated: 30 Jun 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

மின்சார ரெயில்களில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களுக்குரூ.1,000 அபராதம் விதிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். இதில், பலர் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்வதால் ரெயில்வேக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மும்பையில் தினமும் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் மின்சார ரெயிலில் ஓசிப்பயணம் செய்து பிடிபடுகின்றனர்.

இவர்கள் மூலம் மத்திய, மேற்கு ரெயில்வேக்கு மாதத்திற்கு ரூ.15 கோடி கிடைக்கிறது.

தற்போது டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களிடம் ரூ.250 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. ரூ.250 மிகவும் குறைவான தொகையாக இருப்பதால், பலர் பிடிபட்டால் அபராதம் செலுத்திக் கொள்ளலாம் என நினைத்து டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாக ரெயில்வே நிர்வாகம் கருதுகிறது.

எனவே டிக்கெட் இன்றி பயணம் செய்து பிடிபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதமாக விதிக்க மேற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மேற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

டிக்கெட் இன்றி பிடிபடுபவர்களிடம் வசூலிக்கும் அபராதத்தை அதிகரிக்க ரெயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைத்தால் மத்திய, மேற்கு ரெயில்வேயில் டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story