புதிய அரசு பதவி ஏற்ற பிறகு கர்நாடக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார்


புதிய அரசு பதவி ஏற்ற பிறகு கர்நாடக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார்
x
தினத்தந்தி 3 July 2018 6:00 AM IST (Updated: 3 July 2018 6:00 AM IST)
t-max-icont-min-icon

புதிய அரசு பதவி ஏற்ற பிறகு கர்நாடக சட்டசபையின் முதல் கூட்டதொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றுள்ளார். அவர் வருகிற 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்ய முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்புக்கு இடையே குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் ஆயுர்வேத மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றபோது, சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என்று சித்தராமையா உரையாடியது பகிரங்கமானது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி ஆட்சிக்கும் சிக்கலை உண்டாக்கியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு கர்நாடக சட்டசபையின் முதல் கூட்ட தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் மேல்-சபை உறுப்பினர்களும் பங்கேற்ற கூட்டுகூட்டமாக இது நடைபெற்றது. பகல் 12.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். அவர் 1 மணிக்கு உரையை வாசித்து முடித்தார். அரை மணி நேரம் அவர் பேசினார். கவர்னர் இந்தியில் உரையாற்றினார். அந்த உரையின் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியாக்க புத்தகம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா ஆற்றிய உரையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு இப்போது தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அனுபவம் உள்ளவர்களும், புதியவர்களும் இந்த சபைக்கு வந்துள்ளனர். புதிய உறுப்பினர்களை அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் வழி நடத்துவார்கள். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க எனது அரசு மனிதநேய அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுக்கும். விவசாயிகளின் நலனை அரசு பாதுகாக்கும்.

ஒவ்வொரு குடிமகனின் நலனையும் காக்க புதிய திட்டங்களுடன் புதிய பாதையில் எனது அரசு பயணிக்கும். முன்பு செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவோம். வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகம், பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்பட இந்த சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் காக்க எனது அரசு உறுதி பூண்டுள்ளது.

நகரம் மற்றும் கிராமங்களின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு சரிசமமாக திட்டங்கள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்படும். விவசாயிகள் தான் நமது மாநிலத்தின் முதுகெலும்பாக உள்ளனர். விவசாயிகளின் நலனை காக்க எனது அரசு எப்போதும் சிந்தித்து வருகிறது. விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது தான் எனது அரசின் முக்கிய நோக்கம் ஆகும்.

இளைஞர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. நல்ல திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. கல்வி அதிகாரம் மிக்கது என்பது எனது அரசுக்கு தெரியும். திறன் அடிப்படையிலான தொழிற்கல்வியை பாடத்திட்டத்தின் ஒரு பிரிவாக சேர்க்க எனது அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்க எனது அரசு முன்னுரிமை அடிப்படையில் செயல்படும்.

இஸ்ரேல் நாட்டில் பின்பற்றப்படும் முறையை போலவே நமது விவசாயிகளும் உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அரசின் விருப்பம் ஆகும். தண்ணீர் இருப்பு, பருவநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர்களை பயிரிடுமாறு விவசாயிகளுக்கு அதிகாரிகள் களத்திற்கு நேரடியாக சென்று அறிவுரை கூறுவார்கள். எனது அரசு கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை திருப்திகரமான முறையில் நிலைநாட்டி வருகிறது. போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்கள், தங்களின் எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கும் பொறுப்பு என்று எனது அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் போலீஸ் பயிற்சி திறன் அதிகரிக்கப்படும். சைபர் தடயவியல் கூடங்கள் அமைப்பது, தகவல் தொழில்நுட்ப தொடர்பை பலப்படுத்துவது, அலைவரிசை தொடர்பு திறனை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் சைபர் குற்றங்களை தடுக்க முடியும். அடுத்த 5 ஆண்டுகளில் போலீஸ் துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்படும். அனைத்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்களிலும் நிர்பயா மையங்கள் அமைக்கப்படும்.

உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் குறித்த விவரங்கள் திறன் வளர்ச்சி துறையுடன் இணைக்கப்படும். இது பணி ஓய்வுக்கு பின் மறுவாழ்வு வசதிகள் வழங்க உதவும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2020-ம் ஆண்டுக்குள் குழந்தை மற்றும் இளம்பருவ தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக கர்நாடகத்தை உருவாக்க, திருத்தப்பட்ட செயல் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு முழுமையான சுகாதார திட்டத்தை அமல்படுத்துவோம். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மீனவர்களின் மேம்பாட்டிற்காக நீல புரட்சி திட்டத்தை எனது அரசு அமல்படுத்தும்.

பெங்களூருவில் குடிநீர் குழாய்களில் நீர் கசிந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்ட பணிகள் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும். பெங்களூருவில் தற்போது மெட்ரோ ரெயில்களில் தினமும் 3.6 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நகரில் தற்போது 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.

இந்த பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு நகரில் தினமும் மெட்ரோ ரெயில்களில் 20 லட்சம் பேர் பயணம் செய்வார்கள். மைசூருவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள சைக்கிள் பகிர்ந்து கொள்ளும் திட்டம் பெங்களூருவிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு கவர்னர் உரையாற்றினார்.

முன்னதாக சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த கவர்னர் வஜூபாய் வாலாவை முதல்-மந்திரி குமாரசாமி, சபாநாயகர் ரமேஷ்குமார், மேல்-சபை தற்காலிக தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் வரவேற்று சட்டசபை அரங்கத்திற்குள் அழைத்து வந்தனர். சட்டசபைக்குள் வந்தபோது உறுப்பினர்களை பார்த்து கவர்னர் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தப்படி வந்தார். உரை முடிந்த விடைபெற்று சென்றபோதும், வணக்கம் தெரிவித்தபடி கவர்னர் புறப்பட்டு சென்றார். 

Next Story