அரசு பள்ளிகளில் ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் சட்டசபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்


அரசு பள்ளிகளில் ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் சட்டசபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பெங்களூரு, 

அரசு பள்ளிகளில் ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அரசே செலுத்துகிறது

கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ஏ.டி.ராமசாமி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுகையில், “கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு. ஆனால் அங்கு கல்வி பயிற்றுவித்தல் மற்றும் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. அரசு பள்ளிகளில் ஏழைகள், விவசாயிகளின் குழந்தைகள் தான் படிக்கிறார்கள். அரசு அதிகாரிகளின் குழந்தைகள் யாரும் அரசு பள்ளிகளில் படிப்பது இல்லை“ என்றார்.

அப்போது குறுக்கிட்ட முன்னாள் கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட், “புதியதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறையை நாங்கள் கொண்டு வந்தோம். அவற்றை புதிய அரசு அமல்படுத்தும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1.21 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது“ என்றார்.

அரசு நிதி தான் வீணாகிறது

அப்போது பா.ஜனதா உறுப்பினர் மாதுசாமி எழுந்து பேசுகையில், “கல்வி உரிமை சட்டத்தில் குழந்தைகளை சேர்க்க வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஏழை மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தான் அதில் சேர்ந்துள்ளனர். இதனால் அரசு நிதி தான் வீணாகிறது“ என்றார்.

அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார் பேசும்போது, “நமது குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்களா?. அரசு பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளதா?. கல்வி உரிமை சட்டத்தில் ஏழைகளின் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனரா? என்பது குறித்து பதில் சொல்லுங்கள்“ என்றார். உடனே ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் சிவலிங்கேகவுடா குறுக்கிட்டு, “மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துவிட்டது. எங்கள் பகுதியில் கூலித்தொழிலாளிகள் கூட பணம் செலுத்தி தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் அரசு பள்ளிகளில் ஆங்கில மொழியை சரியான முறையில் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கேற்ப திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்“என்றார்.

ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்க...

அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் அரவிந்த் பெல்லத், “அரசு பள்ளி வளாகத்திலேயே எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை எனது ஊரில் தொடங்கி நடத்துகிறேன். அங்கு படித்த குழந்தைகள் அப்படியே அரசு பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்தனர். அதனால் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை கற்றுக்கொடுக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். நான் மேற்கொண்ட இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றது. இந்த முயற்சியை மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தலாம்“ என்றார்.

அப்போது சபாநாயகர் ரமேஷ்குமார், “நான் என்ன தனியார் ஆங்கில பள்ளியிலா படித்தேன். நான் ஆங்கிலம் பேசவில்லையா“ என்றார். அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் பூர்ணிமா, “அரசு பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. சரியான கட்டிடங்கள் இல்லை. கட்டிடங்கள் இடிந்த நிலையில் காட்சி அளிக்கின்றன. அதனால் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். கன்னட மொழியை படிக்க வேண்டும். நமது மொழியை காப்பாற்ற வேண்டும். பெங்களூருவில் உள்ள சில தனியார் பள்ளிகள் கன்னட மொழியை ஒரு பாடமாக கூட கற்பிப்பது இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்“ என்றார்.

பள்ளிகளை அரசு மூடுகிறது

பா.ஜனதா உறுப்பினர் பெல்லி பிரகாஷ், “கிராமங்களில் தற்போது வசிப்பவர்கள், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வது இல்லை. இதனால் கிராமப்புற பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அவ்வாறு குறைவான குழந்தைகள் உள்ள பள்ளிகளை அரசு மூடுகிறது” என்றார்.

Next Story