சிறுபான்மையின மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன்

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை கலெக்டர்(பொறுப்பு) இளங்கோ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்விக்கடன் உள்ளிட்ட அனைத்து கடனுதவி திட்டங்களும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடன் பெற பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரமாக இருத்தல் வேண்டும். இதற்கு வட்டி விகிதம்(ஆண்டிற்கு) 3 சதவீதம்.
2018-2019-ம் கல்வியாண்டிற்கான கல்விக்கடன் வழங்கும் முகாம் வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மாணவர்கள் கடன் தொகை பெற சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று உள்ளிட்டவற்றின் நகல், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் ஆவணங்களுடன் நேரில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story