4 மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


4 மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 July 2018 3:30 AM IST (Updated: 6 July 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 4 மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 4 மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை தொடங்கி வைத்தார்.

பயிற்சி முகாம்

தமிழ்நாடு உயிரிப் பல்வகை வாரியம் மூலம் 4 மாவட்டங்களை சார்ந்த அலுவலர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. பயிற்சிக்கு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகை வாரிய செயலாளர் உதயன் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர்கள் சம்பத்(தூத்துக்குடி), திருமால்(நெல்லை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

கலெக்டர் பேச்சு

அப்போது கலெக்டர் பேசுகையில்,‘ தமிழ்நாடு முழுவதும் 385 வட்டார அளவிலான பல்லுயிரி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்லுயிரிகளை பாதுகாப்பது குறித்து ஏற்கனவே, மாவட்ட அளவிலான குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பல்லுயிரிகள் பாதுகாப்பது குறித்து கிராம அளவில் பதிவேடுகள் பராமரிப்பது, பல்லுயிரிகள் உள்ள இடங்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

பயிற்சியில் தமிழ்நாடு உயிரி பல்வகை சட்டத்தில் குறிப்பிட்டு உள்ள விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் வனத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story