தட்டுப்பாட்டை போக்கிட கூடுதல் இடங்களில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை


தட்டுப்பாட்டை போக்கிட கூடுதல் இடங்களில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2018 10:45 PM GMT (Updated: 6 July 2018 7:48 PM GMT)

தட்டுப்பாட்டை போக்கிட கூடுதல் இடங்களில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.


திருச்சி,

திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க(சி.ஐ.டி.யு) ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், துணைத்தலைவர் மோகன், துணை செயலாளர்கள் அந்தோணி, ரமேஷ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* திருச்சி காவிரி, கொள்ளிடத்தில் 5 இடங்களில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்கி 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். சீராகவும், சரியாகவும் இயற்கையான முறையில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கவும், காவிரி, கொள்ளிடம் ஆறு பாதுகாக்கப்படவும் மாட்டு வண்டியை முறைப்படுத்திட வேண்டும்.


* திருச்சி மாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சிறிய அளவிலான ஏழை, எளிய மக்களின் வீடுகள் மராமத்து மற்றும் விவசாய தேவைகளை ஊக்கப்படுத்திட மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க தொழிலாளர்களை அங்கீகரித்து உரிய அனுமதி வழங்கிட வேண்டும்.

* கட்டிடப்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மணல் தட்டுப்பாட்டை போக்கிட கூடுதலான இடங்களில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிப்பதுடன், கடலூர் மாவட்டத்தில் உள்ளதுபோல உரிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story