கண் துடைப்பாக நடைபெறும் செங்குளம் சீரமைப்பு பணி: விவசாயிகள் குற்றச்சாட்டு


கண் துடைப்பாக நடைபெறும் செங்குளம் சீரமைப்பு பணி: விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 July 2018 11:45 PM GMT (Updated: 7 July 2018 11:03 PM GMT)

சின்னமனூரில் செங்குளம் சீரமைப்பு பணி கண்துடைப்பாக நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சின்னமனூர்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கருக்கு, முதல்போக நெல் சாகுபடிக்காக கடந்த மாதம் 17-ந்தேதி முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சின்னமனூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் கருங்கட்டான்குளம், உடையகுளம், செங்குளத்தில் அந்த தண்ணீர் தேக்கி வைப்பது வழக்கம். இதையடுத்து செங்குளத்தை தூர்வாரி சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதன்படி குளம் தூர்வாரப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் உடையகுளம் நிரம்பி செங்குளத்துக்கு மறுகால் பாய்ந்தது. ஆனால் செங்குளத்தின் கரைப்பகுதியில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

இதைத்தொடர்ந்து செங்குளத்துக்கு வந்த தண்ணீர் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. அத்துடன் செங்குளத்தில் உடைந்த கரைப்பகுதியில் மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் அடுக்கி வைத்துள்ளனர். இதையடுத்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி நேற்று மண்ணை கொண்டு கரையை பொதுப்பணித்துறையினர் சரி செய்து வருகின்றனர். ஆனால் கரையை பலப்படுத்தாமல் கண்துடைப்பாக மண்ணை கொண்டு கரையை செம்மைப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்கும் போது கரைகளில் மீண்டும் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கற்களை கொண்டு கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story