ஒருமுறை முதல்வராகி விட்டால் தமிழகத்தில் தினகரன் தான் நிரந்தர முதல்-அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு


ஒருமுறை முதல்வராகி விட்டால் தமிழகத்தில் தினகரன் தான் நிரந்தர முதல்-அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 8 July 2018 10:00 PM GMT (Updated: 8 July 2018 6:52 PM GMT)

தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் ஒருமுறை முதல்வராகிவிட்டால் நிரந்தர முதல்-அமைச்சராகி விடுவார் என்று ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில் உறுப்பினர் சேர்க்கை குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி-பிளாக் ஏ.பி.சி. மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு முன்னாள் வாரிய தலைவர் ஜி.முனியசாமி, மாநில மகளிரணி துணை செயலாளர் கவிதா சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பேசினர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. அமைப்பு செயலாளருமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் டி.டி.வி.தினகரனை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் ஒருமுறை முதல்வராகிவிட்டால் அதன்பின்னர் தொடர்ந்து நிரந்தர முதல்- அமைச்சராகி விடுவார். அந்தஅளவுக்கு மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துஉள்ளது. அவரிடம் ஆளுமை திறன், ஒருங்கிணைத்து செல்லும் திறன் ஆகியவை உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் பேசும்போது, தமிழகத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். ஆட்சி மோடியின் அடிமை ஆட்சியாக செயல்படுகிறது. ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தவர்கள்தான் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்., தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் அ.தி.மு.க. பெயரை கூறி ஓட்டுக்கேட்க போனால் உள்ள மரியாதையும் கெட்டுவிடும் சூழல் உள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அரசை அகற்ற வேண்டும். அதற்கு தமிழகத்தில் டி.டி.வி. தினகரன் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


இதில் ராமேசுவரம் முன்னாள் நகரசபை தலைவர் அர்ச்சுனன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்தீசுவரன், நகர் செயலாளர் ரஞ்சித்குமார், மண்டபம் ஒன்றிய பொருளாளர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் சண்முகபாண்டி, பட்டணம்காத்தான் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் ராஜேந்திரன், குயவன்குடி ஊராட்சி கழக செயலாளர் சிகாமணி, மண்டபம் நகர் செயலாளர் களஞ்சியராஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி, வக்கீல் பிரிவு ஸ்ரீகாந்த், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் அடைக்கலம், ஜி.முத்து, கே.ஜி.செல்வம், ஜி.முரளி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் அதில் இருந்து விலகி தங்களை அ.ம.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். முடிவில் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story