சென்னை முகப்பேரில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை


சென்னை முகப்பேரில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 8 July 2018 8:51 PM GMT (Updated: 8 July 2018 8:51 PM GMT)

சென்னை முகப்பேரில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி வீட்டில் 100 பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் மற்றும் 8 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.


அம்பத்தூர்,

சென்னை முகப்பேர் மேற்கு காளமேகம் சாலையில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 68). இவர், இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர், தனது மூத்த மகன் மோகன்ராஜ் என்பவருடன் வசித்து வருகிறார். மோகன்ராஜ், வங்கி அதிகாரியாக உள்ளார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயரான இளைய மகன் கவிராஜ், சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 6-ந் தேதி காலை வீட்டை பூட்டி மூர்த்தி உள்பட அனைவரும் சிறுசேரியில் உள்ள கவிராஜ் வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து அனைவரும் தங்கள் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பின்னர் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மதியம் முகப்பேரில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் இரும்பு கதவு மற்றும் மரக்கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக்கிடந்தது. பின்னர் பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 100 பவுன் நகைகள், பூஜை அறையில் இருந்த 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.


மூர்த்தி தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்த 20-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றிய போலீசார், அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆராய்ந்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தி வீட்டின் தரை தளத்தில் உள்ள கடை மற்றும் அருகில் உள்ள கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story