வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால் பணத்தை திரும்ப கேட்டு வாலிபர் கடத்தல் அண்ணன்-தம்பி உள்பட 7 பேர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு ஏஜெண்டின் தம்பியை கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 35). வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜெண்டான இவர், புதுக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (26), கோபி, சத்தியமூர்த்தி, கார்த்திகேயன், தமிழரசன், சின்னதம்பி, ஆரோக்கியசாமி ஆகிய 7 பேரை மலேசியாவை சேர்ந்த முத்து என்பவர் மூலமாக வியாட்நாமில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறினார்.
இதற்காக 7 பேரிடமும் தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுக்கொண்ட அவர், கடந்த 27-ந் தேதி தனது தம்பி தமிழ்செல்வன் (26) உடன் 7 பேரையும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஒரு வாரம் ஓட்டலில் தங்கி இருந்தும், வேலை பற்றி மலேசியாவை சேர்ந்த முத்து எந்த தகவலும் சொல்லவில்லை.
இதையடுத்து சாமிநாதன், அவர்களை திரும்பி வரும்படி கூறினார். இதையடுத்து சுதாகரை தவிர மற்ற 6 பேரையும் திருச்சிக்கு அனுப்பி வைத்த தமிழ்செல்வன், சுதாகருடன் மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தார். தம்பியை அழைத்துச்செல்வதற்காக சாமிநாதன், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அதேபோல் சுதாகரின் அண்ணன் ரமேஷ் உள்பட 6 பேரும் காரில் விமான நிலையம் வந்தனர். அவர்களிடம், வியாட்நாமில் வேலை கிடைக்காததால் ஊருக்கு சென்றதும் உங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப தந்து விடுவதாக சாமிநாதன் கூறினார்.
பின்னர் விமான நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது ரமேஷ், அவருடைய தம்பி சுதாகர் உள்பட 7 பேரும் திடீரென தமிழ்செல்வனை காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாமிநாதன், இதுபற்றி சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட தமிழ்செல்வனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் ரேடியல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக காரில் கடத்தி செல்லப்பட்ட தமிழ்செல்வனை போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (32), அவருடைய தம்பி சுதாகர், பாஸ்கர் (37), சதீஷ்குமார் (33), மோகன் (24), மற்றொரு ரமேஷ் (32), கார் டிரைவர் வெங்கடேஸ்வரன் (22) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சாமிநாதன், சுதாகருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தராததால் கொடுத்த பணத்தை திருப்பி பெற அவருடைய தம்பி தமிழ்செல்வனை கடத்தியதாக தெரிவித்தனர். கைதானவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி விமான நிலைய போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story