திருச்சியில், உலக பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி தொடங்கியது


திருச்சியில்,  உலக பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி தொடங்கியது
x
தினத்தந்தி 13 July 2018 10:45 PM GMT (Updated: 13 July 2018 8:19 PM GMT)

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் உலக பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

இந்த கண்காட்சியை பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமையில் ப.குமார் எம்.பி. நேற்று காலை தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் பண்டைக்காலத்தில் உலகின் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட வித விதமான நாணயங்கள், பணத்தாள்கள் இடம் பெற்று உள்ளன. நமது நாட்டின் ரூபாய் நோட்டில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட பழைய நாணயங்கள், தற்போது பயன்பாட்டில் உள்ள பணத்தாள்கள் வரை இடம் பெற்று உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, அர்ஜெண்டினா, மலேசியா, சிங்கப்பூர், பங்களா தேஷ், பிரேசில், சோமாலியா, நைஜீரியா, ஜிம்பாப்வே, சுவிட்சர்லாந்து உள்பட பல நாடுகள் மற்றும் மிக சிறிய குட்டி நாடுகளில் பயன்பாட்டில் உள்ள பணத்தாள்களும் இடம் பெற்று உள்ளன.

இந்திய நாணயங்களை பொறுத்தவரை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தைய முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட காலணா, அரையணா நாணயங்கள், மொகலாயர் ஆட்சி காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திய குடியரசின் சார்பில் அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்ட ஆண்டுகள், அந்த ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்ட இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர்களின் பெயர் விவரங்களுடன் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அஞ்சல் தலைகள், பண்டைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எடை கற்கள், பூட்டுகள், மன்னர்கள் காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய கத்தி, வாள் உள்ளிட்ட பலவிதமான ஆயுதங்கள், பண்டைக்கால மக்கள் பயன்படுத்திய வீட்டு உபயோக பொருட்களும் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. அஞ்சல் தலை, அஞ்சல் அட்டைகளால் உருவாக்கப்பட்ட ரெயில் என்ஜின் மாதிரி வடிவம், ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம், நாணயங்களால் உருவாக்கப்பட்ட மரம் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் தொடர்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் நாணயங்கள், அவை புழக்கத்தில் இருந்த ஆண்டு, ஒவ்வொரு நாடுகளிலும் பயன்படுத்தப்படும் பணத்தாள்களின் பெயர் விவரம் போன்றவை தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கான தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்த கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.

Next Story