மின் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை அமைச்சர் கமலக்கண்ணன் திட்டவட்டம்


மின் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை அமைச்சர் கமலக்கண்ணன் திட்டவட்டம்
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 9:49 PM GMT)

புதுச்சேரியில் மின் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-


ராமச்சந்திரன் (சுயே): மின்சார கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் குறைக்க முன்வருமா?

அமைச்சர் கமலக்கண்ணன்: தற்போதைய ஆண்டின் மின்சார கட்டணம் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அதனுடைய ஒழுங்குமுறை விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும். கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை.

டி.பி.ஆர். செல்வம் (என்.ஆர்.காங்): கல்வித்துறையின் புதிய வழிகாட்டுதலின்படி நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அந்தந்த தொகுதி பள்ளிக்கூடத்திலேயே அமைத்துத்தர அரசுக்கு எண்ணம் உள்ளதா?

அமைச்சர் கமலக்கண்ணன்: இதுகுறித்து பரிசீலிக்கப் படும்.

சிவா: பி.என்.எல். நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை மற்றும் பொருட்கள் எப்போது வழங்கப்படும்?

முதல்-அமைச்சர் நாரா யணசாமி: பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. புதுச்சேரி தனி நீதிமன்றத்தில் தக்க அதிகாரியால் தொடரப்பட்ட வழக்கும், ஐகோர்ட்டில் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இவை முடிந்த பிறகே பாதிக்கப்பட்டவர் களுக்கு தொகை மற்றும் பொருட்கள் கிடைப்பதற் குரிய வழிவகையான கையகப் படுத்திய பொருட்களை ஏலம் மூலமாகவோ அல்லது நிர்வாகியாக சென்னை ஐகோர்ட்டினால் முன்பு நியமிக்கப்பட்டவர் மூலமாகவோ கிடைப்பது குறித்து அறிய வரும்.

பாஸ்கர்: முதலியார்பேட்டை தொகுதியில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் சாலை கோட்டத்துக்கு சொந்தமான வாய்க்கால்களும், நீர்ப்பாசன கோட்டத்திற்கு சொந்தமான வாய்க்கால்களும் இதுவரை தூர்வாரப்படாதது ஏன்?

அமைச்சர் நமச்சிவாயம்: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்படும்.


கீதா ஆனந்தன் (தி.மு.க.): சுற்றுலாத்துறையின் மூலம் திருப்பட்டினத்தில் உள்ள பழைய கடற்கரை சாலையை மேம்படுத்தி புதிய சாலை அமைத்து தரம் திட்டம் அரசிடம் உள்ளதா?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: தற்போது துறையிடம் அதுபோன்ற திட்டம் இல்லை. காரைக்காலில் உள்ள பிற கடற்கரைகளை கடற்கரை சுற்றுலா என்ற திட்டத்தின்கீழ் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்திடம் அடுத்த ஆண்டில் நிதியுதவி கோரப்பட உள்ளது. அப்போது இத்திட்டம் மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்திடம் எடுத்து செல்லப்படும்.

Next Story