சேலம் மாவட்டம் மூலம் அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 768 கோடி வருமானம்


சேலம் மாவட்டம் மூலம் அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 768 கோடி வருமானம்
x
தினத்தந்தி 14 July 2018 10:15 PM GMT (Updated: 14 July 2018 9:30 PM GMT)

சேலம் மாவட்டம் மூலம் ரூ.4 ஆயிரத்து 768 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று அரசு முதன்மை செயலாளர் தென்காசி சு.ஜவகர் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி கூட்டம், செந்தில் பப்ளிக் பள்ளி கூட்டரங்கில் நடந்தது. இதற்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி முன்னிலை வகித்தார். கருவூலம் மற்றும் கணக்குத் துறை, முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் தென்காசி சு.ஜவகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் நடைபெற, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.288 கோடியே 91 லட்சம் ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கி உள்ளது.

இந்த திட்டம் செயல் படுத்தக்கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது. திட்டத்தின்படி பல்வேறு துறை பணியாளர்கள், சம்பள பட்டியல் சமர்ப்பிக்க கருவூலத்திற்கு நேரடியாக செல்ல தேவை இல்லை. மாநிலம் முழுவதும் பணம் பெற்று வழங்கும் 29 ஆயிரம் அலுவலர்கள் நேரடியாக இணைய தளம் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும்.

இதனால் பட்டியல் சமர்ப்பிப்பதில் ஏற்படும் கால விரயமும் தேவையற்ற அலைச்சலும் தவிர்க்கப்படுவதுடன் பட்டியல்கள் விரைவாக ஏற்கப்பட்டு தீர்வு காணப்படும். மேலும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இத்திட்டம் வருகிற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 37 ஆயிரத்து 670 அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து ஆயிரத்து 285 பேர் ரூ.578 கோடிக்கான மருத்துவ சலுகை பெற்றுள்ளனர். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ரூ.825 கோடியே 89 லட்சம் ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.1,736 கோடியே 79 லட்சம் மாவட்டக் கருவூலம் மற்றும் 10 சார்நிலை கருவூல அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் அரசுக்கு வருமானமாக இந்த நிதியாண்டில் மட்டும் சேலம் மாவட்டம் மூலம் ரூ.4 ஆயிரத்து 768 கோடியே 30 லட்சம் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, திட்ட இயக்குனர் அருள்ஜோதி, கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மண்டல இணை இயக்குனர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story