பெட்ரோல், டீசல் மீதான 2 சதவீத வரி உயர்வு அமலுக்கு வந்தது


பெட்ரோல், டீசல் மீதான 2 சதவீத வரி உயர்வு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 15 July 2018 5:52 AM IST (Updated: 15 July 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பட்ஜெட்டில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல் மீதான 2 சதவீத வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

பெங்களூரு,

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அன்னபாக்ய திட்ட அரிசி அளவு குறைப்பும் நடைமுறைக்கு வந்தது.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் முதலாவது பட்ஜெட்டை கடந்த 5-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அப்போது விவசாயிகள் கடன் ரூ.34 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்தார். அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் வரி உயர்வை 2 சதவீதம் உயர்த்தினார். மேலும் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார். இதுதவிர பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு கூட்டணி கட்சியான காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் வரி உயர்வு திரும்ப பெறப்படலாம் என்ற தகவல் வெளியானது.

ஆனால் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட வரி திரும்ப பெறப்பட மாட்டாது என்று முதல்-மந்திரி குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால் பட்ஜெட்டில் அறிவித்தபடி கர்நாடகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 2 சதவீத வரி உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. அதாவது பெட்ரோல் மீதான விற்பனை வரி 30 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாகவும், டீசல் விற்பனை வரி 19 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை 1 ரூபாய் 14 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 12 காசுகளும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று, அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட 7 கிலோ அரிசியை 5 கிலோவாக குறைத்து பட்ஜெட்டில் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருந்தார். அதுவும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதனால் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இனி 5 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படும். 

Next Story