2 கோவில்கள், 177 வீடுகள் இடித்து அகற்றம்


2 கோவில்கள், 177 வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 16 July 2018 3:30 AM IST (Updated: 16 July 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில் 2 கோவில்கள், 177 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

சிதம்பரம், 


சிதம்பரத்தில் தில்லை காளியம்மன் ஓடை உள்ளது. இந்த ஓடையை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தனர். சிலர் 2 முதல் 3 மாடி கட்டிடங்களையும் கட்டியிருந்தனர். இந்த நிலையில் ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக, மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதற்கு வழியில்லாமல், அருகே உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக தில்லை காளியம்மன் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையின்றி நீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்து கணக்கெடுத்து, மொத்தம் 369 வீடுகளை இடித்து அகற்றுவதற்கு முடிவு செய்தனர். இதற்கான நோட்டீசு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை அதிகாரிகள் அதிரடியாக தொடங்கினர். அதன்படி பூதங்கேனி, தில்லைகாளியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். தெரு ஆகிய பகுதிகளில் இருந்த 68 வீடுகள், ஒரு தனியார் பள்ளியின் சுற்றுசுவர் ஆகியன பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு அந்த பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டம் செய்த நிலையிலும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை.

இதை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் ஏ.ஆர்.பி.டவர் பாலம் அமைந்துள்ள இடத்தில் இருந்து மீதிக்குடி பாலம் வரையில் உள்ள வாகீசநகர், கோவிந்தசாமி நகர் பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது.

கோட்டாட்சியர் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவசங்கரன், செயற்பொறியாளர் அன்பழகன், உதவி செயற்பொறியாளர் குமார், சிதம்பரம் தாசில்தார் அமுதா ஆகியோர் முன்னிலையில் இப்பணிகள் நடந்தது.

இதில் மொத்தம் 9 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. தங்கள் கண் எதிரே வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்த பெண்கள், கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் சிலர் தரையில் விழுந்து அழுததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒருசிலர் சோகத்துடன் தங்களது உடமைகளை தலையில் சுமந்தபடி அங்கிருந்து வெளியேறியதையும் பார்க்க முடிந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறுகையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக கடந்த 6 மாததிற்கு முன்பு நோட்டீசு கொடுத்தனர். ஆனால் தற்போது வீடுகள் இடிப்பது தொடர்பாக முன் அறிவிப்பு எதையும் கொடுக்கவில்லை.

திடீரென இவர்கள் வந்து வீடுகளை இடிக்கின்றனர். நாங்கள் வசிப்பதற்கென்று மாற்று இடம் எதுவும் எங்களுக்கு தரவில்லை. இதனால் குடியிருக்கவும், சாப்பிடவும் வழியில்லாமல் நடுரோட்டுக்கு வந்துவிட்டோம். இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காலஅவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக முறையிட்டனர். ஆனால் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் முனைப்புடன் செயல்பட்டனர். தொடர்ந்து அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட பேர்லீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

2-வது நாள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று மொத்தம் 177 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் ஒரு ரேஷன் கடை, நகராட்சி கழிப்பிடம், 2 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து, இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். 

Next Story