ஓட்டல்களில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


ஓட்டல்களில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 July 2018 4:00 AM IST (Updated: 18 July 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ஓட்டல்களில் கெட்டுப்போன 10 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இருந்தபோதிலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் தரம் இல்லை எனவும், மோசமான உணவுகள் வழங்கப்படுவதாகவும் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாநிதி தலைமையில் ஊட்டி தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி நந்தகுமார், குன்னூர் தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி கோவிந்தராஜ், செந்தில்குமார் ஆகியோர் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள 4 ஓட்டல்களில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசாலா தடவி ஒருமுறை பொறித்து தயார் நிலையில் வைத்திருந்த கெட்டுப்போன கோழி இறைச்சி பலமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 10 கிலோ கோழி இறைச்சி (சிக்கன்), 8 லிட்டர் சமையல் எண்ணெய், காலாவதியான கேரளாவில் பேக்கிங் செய்யப்பட்ட ரெடிமேடு புரோட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மருந்து கடையில் ஆய்வு செய்த போது, ஊட்டியில் தயாரிக்கப்படும் ரெட் ஒயின் என்ற பெயரில் உள்ள திராட்சை ரசம் 2 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த திராட்சை ரசம் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் பதிவு இல்லாமல் தயாரிக்கப்பட்டதால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாநிதி கூறியதாவது:-

ஊட்டி நகரில் தரம் இல்லாத உணவுகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், இந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. மேலும் காலாவதியான குளிர்பானங்கள் கைப்பற்றப்பட்டு குப்பை தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது. ஒரு ஓட்டலில் எலி கடித்த புரோட்டா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டியில் பாரம்பரியமாக வர்க்கி, பிஸ்கட், ஹோம்மேடு சாக்லேட் தயாரிப்பது போன்று ரெட் ஒயின் என்ற பெயரில் திராட்சை ரசம் தயாரிக்கப்படுவது தெரியவந்து உள்ளது. இது தவறானது. இதுபோன்ற பழரசங்களை தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதி பெற்று, அதில் என்னென்ன வேதியியல் பொருட்கள் சேர்க்கப்படுகிறது, எப்போது தயாரிக்கப்படுகிறது என்ற விவரத்தை பாட்டிலில் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும். அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் மோசமான உணவு பொருட்களால் பொதுமக்களுக்கு வயிற்று வலி, புற்றுநோய், வாயுக்கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உணவுப்பொருட்களை தயாரிப்பவர்கள் உரிய அனுமதி பெறாவிட்டால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்க அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி நகரில் சாலையோரங்களில் இரவு நேரத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மோசமாக உள்ளது என்று புகார் வந்து உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story