முதல்-அமைச்சர்கள் முடிவு செய்து தண்ணீர் திறந்தால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன?


முதல்-அமைச்சர்கள் முடிவு செய்து தண்ணீர் திறந்தால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன?
x
தினத்தந்தி 18 July 2018 10:15 PM GMT (Updated: 18 July 2018 7:23 PM GMT)

முதல்-அமைச்சர்கள் முடிவு செய்து தண்ணீர் திறந்தால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன? என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங் கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர்,

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்து, கர்நாடக அணைகளில் தேக்க முடியாத அளவிற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டதால் தண்ணீரை கர்நாடக அரசு வெளியேற்றுகிறது. வேறு வழியில்லாததால் அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வியாழக்கிழமை) மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார்.

கர்நாடகத்தில் வெள்ள நீரை வெளியேற்றுவதிலும், மேட்டூரில் தண்ணீரை திறப்பதிலும் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் வேலை என்ன? அவை ஏன் செயல்படவில்லை. வெள்ள அபாய காலத்தில் அணைகளை பார்வையிட்டு மிகை நீரை திறந்து விட ஆணையிட வேண்டிய அதிகாரம் மேலாண்மை ஆணையத்துக்கு இல்லையா?.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டு அணைகளை எட்டிக்கூட பார்க்காமல் உள்ளது. செயல்படாத பொம்மை நிறுவனங்களான காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங் காற்றுக்குழுவை மத்திய அரசு திட்டமிட்டு உருவாக்கி உள்ளதோ? என்ற சந்தேகம் வலுப்படுகிறது. பெங்களூருவில் அலுவலகம் வைத்து செயல்பட வேண்டிய ஒழுங்காற்றுக் குழு இதுவரை அலுவலகம் திறக்கவில்லை.

கர்நாடக அணைகளின் நீர் திறப்பை கர்நாடக முதல்- மந்திரியும், மேட்டூர் அணை தண்ணீர் திறப்பை தமிழக முதல்-அமைச்சரும் அறிவித்து செயல்படுத்தும் நிகழ்வு என்பது காவிரியில் பழைய நிலை தொடர்கிறது என்பதை காட்டுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகியவற்றில் உள்ள 8 அணைகளின் தண்ணீரை திறந்து மூடுவதற்கு ஆணையிடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது.

இது குறித்து மத்திய அரசிடம் பேசி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை செயல்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் வெள்ளநீரை திறந்து விட முடிவு செய்து இருப்பது அவர் தனது கடமையை செய்ய தவறுகிறார் என்பதையே காட்டுகிறது.

மேலும் ஒரு போக சாகு படிக்குத்தான் முதல்-அமைச்சர் தண்ணீரை திறந்து விடு கிறார் என்றால் இன்னும் சில நாட்கள் கழித்துக்கூட மேட்டூர் அணையை திறக்கலாம். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தும் சட்ட நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story