குலசேகரன்பட்டினத்தில் மளிகை கடையில் ரூ.15 ஆயிரம்- பொருட்கள் திருட்டு

கடையை பூட்டிவிட்டு சாவியை பூட்டிலேயே மறந்து வைத்து விட்டு சென்றதை பயன்படுத்தி மர்ம நபர், கடையை திறந்து ரூ.15 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடி சென்று விட்டார்.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினத்தில் இரவில் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சாவியை பூட்டிலேயே மறந்து வைத்து விட்டு சென்றதை பயன்படுத்தி மர்ம நபர், கடையை திறந்து ரூ.15 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடி சென்று விட்டார்.
கடையில் திருட்டு
குலசேகரன்பட்டினம் கீழ புது தெருவைச் சேர்ந்தவர் மீரா சாகிபு (வயது 65). இவர் குலசேகரன்பட்டினம் மீன்கடை பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவில் தனது கடையை பூட்டியபோது, சாவியை எடுக்க மறந்து, பூட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர், பூட்டிலிருந்த சாவியை எடுத்து, மீரா சாகிபின் கடையை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கு மேஜையில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.1,500 மதிப்பிலான 25 சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு மர்மநபர் தப்பி சென்று விட்டார்.
போலீசார் தீவிர விசாரணை
மறுநாள் காலையில் வீட்டிலிருந்து கடைக்கு புறப்பட்ட மீரா சாகிபு சாவியை தேடினார். வீட்டில் கடையின் சாவி இல்லை. அப்போது தான் முதல்நாள் இரவில் கடையை பூட்டிவிட்டு சாவியை பூட்டிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது தெரிய வந்தது. பதறிப்போன அவர் தனது கடைக்கு சென்றபோது, கடை திறந்து கிடந்தது. கடையில் இருந்த பணம், சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடியதுடன், சாவியுடன் பூட்டையும் அந்த நபர் எடுத்த சென்றதை அறிந்து வேதனைப்பட்டார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story