புளியந்தோப்பில் குடிசைவாசிகள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்து குடிசைவாசிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் உள்ள பகுதியில் 194 குடும்பங்கள் சிறிய குடிசை அமைத்து தங்கி உள்ளனர். அவர்களை காலி செய்யுமாறும், அவர்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் அதே பகுதியில் வீடுகள் கட்டி தருவதாகவும் கூறி அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் வீடுகள் கட்டி அவர்களிடம் ஒப்படைக்கும் வரை 194 குடும்பங்களுக்கும் அதே பகுதியில் உள்ள பெரியார் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் தற்காலிக குடில் அமைத்து தருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இருக்கும் இடமே எங்களுக்கு போதும், நாங்கள் காலி செய்ய மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த குடிசைவாசிகள் 150 பேர் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் நேற்று மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்த புளியந்தோப்பு சரக போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து அனைவரும் கலந்து பேசி வீட்டை காலி செய்வது பற்றி விரைவில் தெரிவிப்பதாக கூறி குடிசைவாசிகள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
துரத்தவில்லை
194 வீடுகளை காலி செய்து அவர்களை நாங்கள் துரத்தவில்லை. மாறாக அவர்களுக்காக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் தற்காலிக குடியிருப்புகள் கட்டி அடுத்த 10 மாதத்திற்குள் அவர்கள் அனைவருக்கும் வீடுகளை ஒப்படைக்க தயாராக உள்ளோம்.
மேலும் அவர்கள் காலி செய்யும் இடத்தில் அடுத்தகட்டமாக மேலும் 2 பிளாக் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கிடைத்து உள்ளதால் விரைவில் அதை தொடங்க உள்ளோம். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி இந்த 194 குடும்பங்களையும் கேட்டுள்ளோம். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் இதை அரசியலாக்கி இதுபோன்று சாலை மறியல் நடத்தி வருவது வேதனையாக உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story