கல்வராயன்மலை வனப்பகுதியில் 3,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது

கல்வராயன்மலை வனப்பகுதியில் 3,800 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி அருகே அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு பெரியார், கவியம், மேகம் உள்ளிட்ட 9 நீர்வீழ்ச்சிகளும், ஏராளமான நீரோடைகளும் உள்ளன. மழைக்காலங்களில் நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, சமூகவிரோதிகள் சிலர் சட்டவிரோதமாக சாராயத்தை காய்ச்சி, விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள கடலூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதை தடுக்க மாவட்ட காவல்துறையினர் அடிக்கடி சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து கல்வராயன்மலைக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள மண்டகப்பாடி, உப்பூர், மட்டப்பட்டு ஆகிய வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மட்டப்பட்டு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 3,800 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 3,800 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அதனை கீழே கொட்டி அழித்தனர். மேலும் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 240 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி போலீசார் அழித்தனர்.
இதையடுத்து சாராய ஊறல் வைத்ததாக உப்பூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மாணிக்கம் (வயது 35), குள்ளன் மகன் சின்னையன்(55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அசோகன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story