நெல்லையில் பரபரப்பு: தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவ-மாணவிகள் காயம்


நெல்லையில் பரபரப்பு: தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவ-மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 24 July 2018 4:00 AM IST (Updated: 24 July 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் உள்ள 2 பள்ளிக்கூடங்களில் தேனீக்கள் புகுந்து கொட்டியதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இதனால் 3 பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

நெல்லை,

நெல்லை டவுனில் ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளியும், இதன் அருகே மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இந்த பள்ளிக்கூட சுற்றுச்சுவரையொட்டி நெட்டிலிங்க மரம் உள்ளது. உயரமான இந்த மரத்தின் உச்சியில் தேனீக்கள் கூடு கட்டி உள்ளன. நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கூடங்கள் நடந்து கொண்டு இருந்தன. காலை 10 மணி அளவில் சூறாவளி காற்று பலமாக வீசியது. இதனால் தேனீக்கள் கூட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த பள்ளிக்கூட வளாகத்தில் பறந்தன. முதலில் ஜவகர் பள்ளிக்கூடத்தில் தேனீக்கள் புகுந்தன.

அங்கு வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகளை தேனீக்கள் கொட்டின. இதை பார்த்த மற்ற மாணவர்கள் அலறியடித்தபடி வகுப்பறையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதேபோல் அருகில் இருந்த மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேனீக்கள் புகுந்து அங்கு இருந்த மாணவிகளையும் கொட்டின.

தேனீக்கள் கொட்டியதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். சில ஆசிரியர்களையும் தேனீக்கள் கொட்டியது. காயமடைந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சுண்ணாம்பு, வெற்றிலை, மிளகு ஆகியவற்றை கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். காயமடைந்த சில மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து அந்த 2 பள்ளிக்கூடங்களுக்கும் தற்காலிக விடுமுறை விடப்பட்டது. அதேபோல் மாநகராட்சி கல்லணை பள்ளி அருகே உள்ள தொடக்கப்பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது. மொத்தம் 3 பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தில் இருந்த தேன் கூட்டை அப்புறப்படுத்தினர். பள்ளிக்கூடங்களுக்கு தேனீக்கள் புகுந்து மாணவர்களை கொட்டிய சம்பவம் நெல்லை டவுன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story