கல்வீச்சில் லாரி கிளீனர் சாவு எதிரொலி: கேரளாவுக்கு டெம்போ வேன்களை இயக்க டிரைவர்கள் மறுப்பு

கேரளாவில் நடந்த கல்வீச்சில் கிளீனர் பலியானதால் கோவையில் இருந்து டெம்போ வேன்களை இயக்க டிரைவர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கோவையில் மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளன.
கோவை,
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் கடந்த 20–ந் தேதி முதல் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் கேரளாவில் லாரிகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அதிகாலை கல்வீச்சு நடந்தது. இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிச் சென்ற லாரி கிளீனர் விஜய் என்கிற முபாரக் பாட்ஷா (வயது 21) பலியானார். டிரைவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் டிரைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லாரி கிளீனர் இறந்த சம்பவம் தொடர்பாக கோவை எம்.ஜி.ஆர். காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைபட்டு உள்ளது.
இந்த மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த காய்கறிகள் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு பிறகும் கேரளாவுக்கு டெம்போ வேன்களில் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் கல்வீச்சில் கிளீனர் இறந்த பின்னர் டெம்போ வேன்களை இயக்க டிரைவர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
இதனால் கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காய்கறி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து மொத்த காய்கறி வியாபாரி ஒருவர் கூறியதாவது:–
கோளாவுக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்ல டெம்போ வேன்கள் இருந்தும் டிரைவர்கள் இல்லாததால் அவற்றை இயக்க முடியவில்லை. இதன் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை விற்க முடியவில்லை. உள்ளூரில் உள்ள சிறிய கடைக்காரர்கள் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வந்து காய்கறி மூட்டைகளை கொண்டு செல்கிறார்கள்.
ஒரு சில டெம்போ வேன் டிரைவர்கள் பயந்து கொண்டே காய்கறிகளை ஏற்றிச் செல்கிறார்கள். கேரளாவுக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியாததால் உள்ளூரில் அந்த விலைக்கு விற்க முடியாது. இதனால் விலை குறையும் என்று சொல்ல முடியாது. வாங்கிய விலைக்கு குறைவாக காய்கறிகளை விற்க யாரும் முன்வரமாட்டார்கள். எனவே காய்கறிகளை கொண்டு செல்லும் டெம்போ வேன் டிரைவர்கள் வாகனங்களை இயக்க முன்வந்தால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவையில் இருந்து ரெயில் மூலம் சரக்குகள் அனுப்புவது அதிகரித்து உள்ளது. கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரசில் ஒரு வேகனில் 18 டன் காய்கறிகள் நேற்று முன்தினம் இரவு அனுப்பப்பட்டது.
கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் செல்லும் குர்லா எக்ஸ்பிரசில் சரக்கு அனுப்புவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதேபோல மற்ற ரெயில்களிலும் சரக்குகள் அனுப்புவது 15 சதவீதம் அதிகரித்துள்ளது. லாரிகள் வேலைநிறுத்தம் மேலும் தீவிரம் அடைந்தால் ரெயிலில் சரக்குகள் அனுப்புவது மேலும் அதிகரிக்கும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
கோவை மளிகை வியாபாரி ஒருவர் கூறியதாவது:–
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகளில் மளிகை பொருட்கள், எண்ணெய் போன்றவற்றின் வரத்து முற்றிலும் நின்று விட்டது. லாரிகள் வேலைநிறுத்தம் குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டதால் கூடுதல் சரக்குகள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை கொண்டு தற்போது நிலைமையை சமாளித்து வருகிறோம். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மளிகை பொருட்கள் இதுவரை விலை உயரவில்லை. இதே நிலை நீடித்தால் பஸ்கள் மூலம் மளிகை பொருட்களை கொண்டு வர மாற்று ஏற்பாடுகளை அரசு செய்தால் விலை ஏற்றத்தை தவிர்க்கலாம். இல்லையென்றால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.