ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிப்பு: சூலூர் விமானப்படை ஊழியர் கைது


ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிப்பு: சூலூர் விமானப்படை ஊழியர் கைது
x
தினத்தந்தி 25 July 2018 4:45 AM IST (Updated: 25 July 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் சூலூர் விமான படை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சூலூர்,

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் பீரேந்திரகுமார். இவருடைய மகன் பப்புகுமார் (வயது 30). இவர் கடந்த மார்ச் மாதம் முதல் சூலூர் விமான படை வளாகத்தில் உள்ள உதிரிபாக பிரிவில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீகாரில் இருந்து மகளிர் போலீசார் சூலூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் பப்புகுமார் குறித்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது இளம்பெண் கற்பழிப்பு தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று சூலூர் போலீசாருடன் விமான படை வளாகத்துக்கு பீகார் போலீசார் வந்தனர். பிடிவாரண்டுடன் சென்ற பீகார் போலீசார், அங்கு பணியில் இருந்த பப்புகுமாரை கைது செய்து சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சூலூர் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பப்புகுமாரை நேற்று மாலை அழைத்து சென்றனர்.

இது குறித்து சூலூர் போலீசார் தரப்பில் கூறியதாவது:-

பெங்களூரு, குவாலியர் ஆகிய பகுதிகளில் கடந்த 2012 ஆண்டு முதல் பப்புகுமார் விமான படை பிரிவில் வேலை செய்து வந்தார். அவர், விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் போது, பாட்னாவில் வசிக்கும் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பப்புகுமார் கற்பழித்து உள்ளார்.

பின்னர் அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பப்புகுமாரை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்யாமல் வரதட்சணையாக கார் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்ய பப்புகுமாரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் பப்புகுமார் சூலூருக்கு மாற்றலாகி வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பாட்னாவில் உள்ள மகிளா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு பாட்னா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா சேகர், பப்புகுமாரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் பப்புகுமாரை தேடி வந்த பாட்னா மகிளா போலீசார் நேற்று சூலூரில் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story