ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2018 4:30 AM IST (Updated: 27 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் காந்திநாதன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வீணடிக்கப்பட்டு வருகிறது என்றும் திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் சென்றடையவில்லை என்றும் கூறினார். இதற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டத்துக்கு வந்து இருந்த அ.தி.மு.க.வினர் தமிழக அரசுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், ஆடலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் இரு தரப்பினரிடமும் சமரசம் பேசி இருக்கையில் அமர வைத்தனர். இதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதம் நடந்தது.

அதன் விவரம் வருமாறு:-

திருவள்ளுவன்:- திருத்துறைப்பூண்டி பகுதிகளில் அதிகமான வாகனங்களில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மண் சாலையில் கொட்டி விபத்து ஏற்படுகிறது. சாலையில் கொட்டி கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.

ராமகிருஷ்ணன்:- பண்ணை குட்டைகளை விவசாயிகளே வெட்டி கொள்ள அனுமதிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழுமையாக கடன் வழங்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பாலகுமார்:- பல ஆண்டுகளாக பேரளம் வீரானந்தம் பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் 40 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இந்த வாய்க்கால் கழிவு நீர் கால்வாயாக மாறுவதை தடுத்து முழுமையாக தூர்வார வேண்டும்.

திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ.: கடைமடை பகுதியான முத்துப்பேட்டை வரை தண்ணீர் முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றங்கரை காவலர்களை தேவையான அளவு நியமிக்க வேண்டும். ஆறுகளில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றால் தான் விவசாயிகள் பயன்பெற முடியும். உழவு மானியம் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை தேவை.

வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன்:- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் கொள்ளளவை கணக்கீட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது. கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டால் தலைப்பு பகுதிகளில் கரைகள் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் நிர்மல்ராஜ்:- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தேவையான அளவு தண்ணீர் திறக்கப்பட்டு, கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கூடுதலான தண்ணீர் வருவதால் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் கூடுதலாக தண்ணீர் திறப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story