தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஆறுகளை இணைக்கக்கோரி கவர்னரிடம் விவசாயிகள் மனு


தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ஆறுகளை இணைக்கக்கோரி கவர்னரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 27 July 2018 4:25 AM IST (Updated: 27 July 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், ஆறுகளை இணைக்க வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,


திண்டுக்கல்லுக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். இதில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், முல்லைப்பெரியாறு அணை அருகே ஆலடி பகுதியில் அணை கட்டுவதற்கு ஜவகர்லால்நேரு பிரதமராக இருந்த போது திட்டம் உருவாக்கப்பட்டது. இதுவரை திட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆலடி பகுதியில் அணை கட்டினால் திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கலாம். எனவே, ஆலடி அணை கட்டுவதோடு, காவிரி மற்றும் வைகை ஆகிய ஆறுகளை இணைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

குடகனாறு குளங்கள், வாய்க்கால் பாதுகாப்பு பாசன விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாவட்டம் கடந்த 7 ஆண்டுகளாக மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிக்கு கீழே சென்று விட்டது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கோதாவரி, காவிரி, வைகை ஆறுகளை இணைக்க வேண்டும். இதன்மூலம் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், திண்டுக்கல்லில் இருந்து சென்னை எழும்பூருக்கு புதிதாக பயணிகள் ரெயில் இயக்க வேண்டும். மேலும் மதுரை-திருச்சி இடையே ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும். இதுதவிர அனைத்து ரெயில்களிலும் கூடுதல் பெட்டிகளை திண்டுக்கல்லில் இணைக்க வேண்டும். திண்டுக்கல்லில் நகர்சுற்று பஸ் இயக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தி, வினியோக நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பாரதீய கிஷான் சங்க மாநில தலைவர் பெருமாள் கொடுத்த மனுவில், கொடைக் கானலில் வனஉயிரியல் சரணாலயம் அமைப்பதால் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொடைக்கானல் மற்றும் 16 கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே, சரணாலயம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் கொடுத்த மனுக்களில் திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் பழமையான அபிராமி அம்மன் கோவில் உள்ளது. அதில் சிலைகள் இல்லாமல் உள்ளது. எனவே, மீண்டும் சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சின்னாளப்பட்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையை புதுப்பிக்க வேண்டும் என்று பாரதரத்னா பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை தலைவர் ராமு.ராமசாமி மனு கொடுத்தார். அதேபோல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை வரலாற்றை 7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும், என்று அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு கொடுத்தனர்.

பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் தனபாலன் கொடுத்த மனுவில், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் ரூ.56 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்த மேம்பால பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதேநேரம் அங்கு 2 ரெயில்வே கேட்களுக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் திறக்கவில்லை. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, ரெயில்வே சுரங்கப்பாதைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story