சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம்: ஆசிரியை சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்


சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம்: ஆசிரியை சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்
x
தினத்தந்தி 27 July 2018 5:41 AM IST (Updated: 27 July 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களை பார்த்து ஆசிரியைக்கு பிரசவம் பார்த்தபோது இறந்துள்ளார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளிகள் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து இருப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை போக்க ஆண்டுக்கு ரூ.500 கோடி அளவுக்கு மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.100 கோடி மருந்துகள் தலைமை மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்று நோய் தடுப்பு மையங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புகடி மற்றும் விஷ பூச்சிகளின் கடிகளுக்கு விஷ முறிவு மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் 2 ஆயிரம் நர்சுகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று, தற்போது 1000 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 562 முதுகலை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசவத்தின் போது, தாய்-சேய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 68 பேர் என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்ததில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

திருப்பூரில் சமூக வலைத்தளங்களை பார்த்து பிரசவம் பார்த்தபோது கிருத்திகா என்ற ஆசிரியை இறந்துள்ளார். இதுபோன்று யாரும் இணையதளங்கள், சமூக வலைத்தளங்களை பார்த்து பிரசவமோ அல்லது மருத்துவமோ பார்க்க கூடாது.

கிருத்திகாவுக்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையங்கள் 72 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க தண்ணீரை மூடி வைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலெக்டர் ராமன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஆதிகேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் திருமால்பாபு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன், துறைத்தலைவர்கள் தேரணிராஜன், அன்பரசு, மோகன்காந்தி, ராஜவேலு, தர்மாம்பாள் உள்பட மற்றும் டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story