கலியநகரி ஊராட்சியில் ஊற்று நீரை சேகரிக்க காத்துக்கிடக்கும் கிராமமக்கள், புதிய ஆழ்குழாய்கள் அமைக்க கோரிக்கை


கலியநகரி ஊராட்சியில் ஊற்று நீரை சேகரிக்க காத்துக்கிடக்கும் கிராமமக்கள், புதிய ஆழ்குழாய்கள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 July 2018 4:00 AM IST (Updated: 29 July 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

கலியநகரி ஊராட்சியில் கிணற்றில் ஊற்றுநீரை சேகரிக்க இரவு–பகலாக கிராம மக்கள் காத்துக்கிடக்கின்றனர். இங்கு புதிய ஆழ்குழாய்கள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி,

திருவாடானை யூனியன் கலியநகரி ஊராட்சியில் உள்ள பாசிப்பட்டினம், கலியநகரி, பரப்புவயல், கரிச்சான் சேரி ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடற்கரை கிராமங்களான இக்கிராமங்களில் நீண்ட காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்த ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் தினமும் அவதிஅடைந்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு மங்கலக்குடி கூட்டு குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இவ் ஊராட்சியில் உள்ள பல கிராமங்களுக்கு பல்வேறு காரணங்களால் மங்கலக்குடி கூட்டு குடிநீர் திட்டம் முற்றிலும் தடைபட்டு பல ஆண்டுகளாகி விட்டது.

இந்நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மாதத்தில் அதிக பட்சம் 10 நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் குடிப்பதற்கு ஒரு குடம் தண்ணீரை ரூ.10–க்கும், மற்ற தேவைகளுக்கு ஒரு குடம் தண்ணீரை ரூ.7–க்கும் லாரிகளில் வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர்.

இந்த ஊராட்சியில் இதுநாள் வரை ஆழ்குழாய்கள் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் கலிய நகரி தோப்பு பகுதியில் கிடைக்கும் ஊற்று தண்ணீரை பல மணி நேரம் காத்திருந்து கிணற்றில் நீர் ஊற ஊற சேகரித்து செல்கின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக மழை இல்லாததால் கடும் வறட்சி காரணமாக இங்குள்ள கண்மாய்,ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வற்றி வறண்டு போய் விட்டது.

இதனால் கலியநகரி தோப்பு பகுதியில் கிடைத்த ஊற்று தண்ணீரும் இப்போது வற்றி விட்டது. எப்போது ஒருகுடம் தண்ணீர் ஊரும் என இந்த கிணற்று பகுதியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் பாசிபட்டினம்,கலியநகரி கிராமங்களில் புதிதாக 2 ஆழ்குழாய்கள் அமைத்து தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், ஜமாத் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், மகளிர் மன்றத்தினர் சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story