மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் கவர்னர் தலையிடவேண்டும் நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்

மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் பா.ஜனதா அரசு தொடர்ந்து காலத்தை வீணடித்து வருகிறது.
மும்பை,
மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் பா.ஜனதா அரசு தொடர்ந்து காலத்தை வீணடித்து வருகிறது. எனவே கவர்னர் வித்யாசாகர் ராவ் இந்த பிரச்சினையில் தலையிடவேண்டும் என்று அவரை நேரில் சந்தித்து காங்கிரஸ் வலியுறுத்தியது.
மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று விதான் பவனில் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கவர்னர் வித்யாசாகர் ராவை ராஜ்பவனில் சந்தித்து பேசினர்.
அப்போது அவரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் ஏற்படும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். இடஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்ட அப்பாவி போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இடஒதுக்கீடு பிரச்சினையில் ஆளும் கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனாவின் நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது. மராத்தா, முஸ்லிம்கள், தங்கர், மகாதேவ் கோலி மற்றும் லிங்காயத் சமுதாயத்தினரின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க மறுக்கிறது. அவர்களின் பிரச்சினைகளை நிலுவையில் வைத்திருக்க அரசாங்கம் விரும்புகிறது. இதற்காக தொடர்ந்து காலத்தை வீணடித்து வருகிறது.
அரசு எந்த முடிவும் எடுக்காதது மாநிலத்தின் அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிக்க கூடியதாக அமையும். எனவே கவர்னர் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story