நாமக்கல்லில் ரூ.51.63 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க திட்ட அனுமதி


நாமக்கல்லில் ரூ.51.63 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க திட்ட அனுமதி
x
தினத்தந்தி 1 Aug 2018 10:15 PM GMT (Updated: 1 Aug 2018 8:15 PM GMT)

நாமக்கல்லில் ரூ.51 கோடியே 63 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் அமைக்க திட்ட அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டையை ஒட்டி பஸ்நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ்நிலையம் கடந்த 1980-ம் ஆண்டு 3.77 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது ஆகும். அப்போது பஸ்நிலையத்திற்கு மிக குறைவான பஸ்களே வந்து சென்றன.

இதனால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் நாளடைவில் பஸ் மற்றும் இதர வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்ததால் பஸ்நிலையம் மற்றும் அதை ஒட்டி உள்ள பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறநகர் பஸ் நிலையம் அமைப்பது ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்கும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கரும் சட்டசபையில் பேசினார்.

இந்த கோரிக்கையை ஏற்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் நாமக்கல்லில் புறநகர் பஸ் நிலையம் ரூ.35 கோடியில் அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் புறநகர் பஸ்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

இறுதியாக நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 12.9 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ்நிலையத்தை அமைக்க முடிவு செய்தனர். தற்போது இந்த நிலம் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்டு, நகராட்சி பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கடந்த ஆண்டு நாமக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என அறிவித்தார். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தற்போது அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் நாமக்கல் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் ரூ.51 கோடியே 63 லட்சம் மதிப்பில் கட்ட அனுமதி அளித்து இருப்பதாகவும், இந்த திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு திட்டத்தில் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி சாலைகளை அமைத்த தனியார் நிறுவனம் சுங்க கட்டணம் வசூல் செய்வதுபோல், பஸ் நிலைய கட்டுமான பணிக்கு தனியார் நிறுவனத்திடம் இருந்து தொகை பெறப்படும்.

அதற்காக பஸ் நிலையத்தில் சுங்கம், வாடகை உள்ளிட்ட வருமான இனங்களை தனியார் நிறுவனம் வசூலிக்க குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story