விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: கடைகள் அடைப்பு- சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: கடைகள் அடைப்பு- சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:15 AM IST (Updated: 4 Aug 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பெருமுக்கலில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

பிரம்மதேசம்,



திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கல் காலனியை சேர்ந்தவர் வேம்பன் மகன் மணிகண்டன்(வயது 32). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணை செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (28). இவர்களுக்கு சைலேஷ் (7) என்கிற மகன் உள்ளான்.

நேற்று முன்தினம் இரவு, அந்த கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நடந்து சென்ற போது, மணிகண்டனை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மணிகண்டனின் தம்பி கனகராஜ் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதில், மணிகண்டனுக்கும், வடகொளப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதன் காரணமாக பாலு, அவரது ஆதரவாளர் பாலா, பாலகிருஷ்ணன், வாசு, ஆனந்தன், மணிகண்டன் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து மணிகண்டனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை, பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் பிடித்து வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பெருமுக்கல் கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தநிலையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மரக்காணம்-திண்டிவனம் சாலையில் பெருமுக்கல் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டதுடன், போலீசார் அவ்வப்போது தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Next Story