தரைத்தளம் சீரமைப்பால் தஞ்சை பெரியகோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது


தரைத்தளம் சீரமைப்பால் தஞ்சை பெரியகோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது
x
தினத்தந்தி 4 Aug 2018 4:07 AM IST (Updated: 4 Aug 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

தரைத்தளம் சீரமைப்பால் தஞ்சை பெரியகோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய தொல்லியல்துறை தென்னிந்திய சரக இயக்குனர் நம்பிராஜன் கூறினார்.

தஞ்சாவூர்,


மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. பெரியகோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள செங்கற்கள் சிதிலமடைந்து, ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு இருந்தது.

இதனால் தரைத்தளத்தில் உள்ள செங்கற்களை அகற்றிவிட்டு புதிய செங்கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம், விமான கோபுரம் ஆகியவற்றில் படிந்துள்ள பாசிகளை ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

தரைத்தளம் சீரமைக்கும் பணியை இந்திய தொல்லியல்துறையின் தென்னிந்திய சரக இயக்குனர் நம்பிராஜன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை பெரியகோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தரைத்தளத்தில் உடைந்து போன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே சென்று விடுகிறது. இதனால் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். தண்ணீர் உள்ளே போகாத வகையில் பழங்காலத்தில் எந்த மாதிரியான செங்கற்களை பயன்படுத்தி, தளம் அமைக்கப்பட்டதோ அதே அளவு செங்கற்கள், சுண்ணாம்பு கலவைகளை கொண்டு இருஅடுக்குகளாக அமைக்கப்படுகிறது.

மழை பெய்தாலும் தண்ணீர் அடித்தளத்துக்கு செல்வதை தவிர்க்கவும், வெளிப்புறமாக தண்ணீர் செல்லும் விதமாக சாய்வான தளம் அமைக்கப்பட்டு வருகிறது. முன்பு எந்த முறையை பின்பற்றப்பட்டதோ அதேபோல தான் பணி நடைபெறுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

மழையில் கோவில் கோபுரங்கள் நனைவதால் பாசிகள் படிந்து கருப்பாக உள்ளது. இந்த பாசியானது கற்களையும், கற்களுக்கு இடையே உள்ள இணைப்பையும் சிதைக்கும். இதை தவிர்க்க இந்த ஆண்டு 3 கோபுரங்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. வேதிப்பொருட்களை பயன்படுத்தி பாசிகள் அகற்றப்படுகிறது. இந்த பணியால் சிற்பங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரியகோவிலுக்கு கும்பாபிஷேகம் எந்த தேதியில் நடத்த வேண்டும் என கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் கும்பாபிஷேக தேதியை சொன்னால் தொல்லியல்துறை சார்பில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வோம்.

பெரியகோவில் பராமரிப்பு பணிக்காக ஆண்டுதோறும் தேவையான நிதியை ஒதுக்கி வருகிறோம். கோவில் முன்பு தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை பெரியகோவிலில் உள்ள ராஜராஜசோழன் சிலை, லோகமாதேவி சிலைக்கு தென்னிந்திய சரக இயக்குனர் நம்பிராஜன் மாலை அணிவித்தார். முன்னதாக மாமன்னன் ராஜராஜசோழன் பதவியேற்று 1,033-வது ஆண்டு நிறைவு விழா பெரியகோவில் வளாகத்தில் நடந்தது. இதற்கு இந்திய தொல்லியல்துறை தென்னிந்திய சரக இயக்குனர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே முன்னிலை வகித்தார். தொல்லியல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

இதில் பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை நிர்வாகி சிவபாதசேகரன், சோழமண்டல வரலாற்று தேடல்குழு ஆலோசகர் செல்வராஜ், கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டு குழும தலைவர் கோமகன், வரலாற்று ஆய்வாளர் பத்மாவதி, ஆசிய தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் விசாகன்மைலாசலம், தஞ்சை தமிழ்ச்சங்க தலைவர் தெய்வநாயகம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நிறைவுரை ஆற்றினார். முடிவில் தமிழ் எழுச்சி பேரவை செயலாளர் இறையரசன் நன்றி கூறினார்.

Next Story