2 பெண்களிடம் 15 பவுன் நகைகள் பறிப்பு


2 பெண்களிடம் 15 பவுன் நகைகள் பறிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2018 11:01 PM GMT (Updated: 5 Aug 2018 11:01 PM GMT)

சாத்தான்குளம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் 15 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம், 


சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் சென்னையில் உள்ள காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்திரை பூபதி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் சித்திரை பூபதி தனது வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சென்று, சித்திரை பூபதியிடம் வழிகேட்பது போன்று நைசாக பேச்சு கொடுத்தார்.

அப்போது அந்த மர்மநபர் திடீரென்று சித்திரை பூபதி கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு, அங்கு தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி சங்கரலதா (45). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலையில் தனது கடையில் இருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சென்று, பெட்டிக்கடையில் சங்கரலதாவிடம் தண்ணீர் பாக்கெட் கேட்டார்.

சங்கரலதா தண்ணீர் பாக்கெட் எடுத்து கொடுத்தபோது, அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து கொண்டு, தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story