மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள்


மலைப்பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 PM GMT (Updated: 9 Aug 2018 5:50 PM GMT)

குன்னூர் அருகே மலைப்பாதையில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

குன்னூர், 



குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. பலாப்பழத்தை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூருக்கு படையெடுக்கின்றன. கடந்த ஒரு வாராமாக குன்னூர் மரப்பாலம் அருகே உள்ள வடுகன் தோட்டம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று காலை குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் திடீரென 4 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தன.

இதில் ஒரு காட்டு யானை சாலையோரத்தில் குட்டிக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க முயன்றனர். வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டமாக இருந்த யானைகளில் ஒன்று ஆக்ரோஷமாக காணப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னுர் வனச்சரகர் பெரியசாமி உத்தரவின் பேரில் வனகாவலர் ராம்குமார், வேட்டை தடுப்பு காவலர் ராமகுமார், வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினர்.

அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுயானைகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story