பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Aug 2018 11:13 PM GMT (Updated: 9 Aug 2018 11:13 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் வருகிற 16-ந்தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

வேலூர், 


இதுகுறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி, பயிர்களை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் காரிப் பருவ பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இதற்காக இந்த ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் 883 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். கடன் பெறாத விவசாயிகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொதுச்சேவை மையங்கள் மூலமாகவோ மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
காரிப் பருவ பயிர்களான துவரை, நிலக்கடலை, மக்காச்சோளம், கம்பு, சோளம், உளுந்து, பச்சைப்பயிறு, பருத்தி, எள் மற்றும் ராகி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தற்போதைய பருவத்தில் பரவலாக பயிரிடப்பட்டுள்ள பயிர்களான மக்காச்சோளம், ராகி, எள், கம்பு, உளுந்து, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்த வேண்டிய தொகை ஒரு ஏக்கருக்கான விவரம் வருமாறு:-
ராகி ரூ.190, மக்காச்சோளம் ரூ.358, சோளம் ரூ.224, நிலக்கடலை ரூ.456, எள் ரூ.202, கம்பு ரூ.210, துவரை ரூ.286, பச்சைப்பயிறு ரூ.286, உளுந்து ரூ.286, பருத்தி ரூ.1010.
இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதை பொதுச்சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story