பள்ளி கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும்


பள்ளி கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 11 Aug 2018 3:00 AM IST (Updated: 11 Aug 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என கரூரில் நடந்த பள்ளிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர், 



தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக், உயர்நிலை, மேல்நிலை, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பள்ளி கட்டிடங்களுக்கு டி.டி.சி.பி. அனுமதி பெறுவது தொடர்பான விளக்க கூட்டம் கரூர் மணவாடியிலுள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை திருச்சி சரக உதவி இயக்குனர் நாகேஸ்வரன் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு முறையான அனுமதி பெற்று பள்ளி கட்டிடங்களை பாதுகாப்போடு வைத்திருப்பது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார்.

அதனை தொடர்ந்து அந்த சங்கத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் முகம்மது பாசுலுல் ஹக் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் தமிழக அரசு உத்தரவின்படி நகராட்சி சார்பில் கரூரிலுள்ள அனைத்துவகை பள்ளி கட்டிடங்களையும் அளவீடு செய்து சொத்துவரி விதிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. எனினும் 2017-2018, 2018-2019, 2019-2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் அந்த செலவுகளின்றி கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பள்ளிகளில் செலவுத்தொகை அதிகரித்து கூடுதல் நிதிசுமை ஏற்படுவதை தடுத்திடும் பொருட்டு பள்ளி கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயித்த கட்டணங்களை மாணவர்கள் பாக்கியில்லாமல் பள்ளிக்கு செலுத்த வேண்டும்.

தமிழக அரசால் வழங்கப்படும் சமச்சீர் பாடப்புத்தகங்களை மூன்று பருவத்திற்கும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் பதிவு செய்து வாங்க அந்தந்த மாவட்ட தலைமையிடங்களிலேயே பள்ளிகள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துதர வேண்டும். மாவட்டந்தோறும் பாடநூல் விற்பனையாளர்கள் மூலம் புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளை பார்வையிட அமைக்கப்படும் குழுவில் தனியார் பள்ளி தாளாளர்களையும் இடம்பெற செய்து கருத்துக்களை கேட்க வேண்டும். மழலையர் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கராஜூ, காமராஜூ, கரூர் மாவட்ட தலைவர் ராமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் துணை தலைவர் கருணாநிதி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பள்ளி தாளாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story