அண்ணா பல்கலைக்கழக ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி


அண்ணா பல்கலைக்கழக ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2018 10:45 PM GMT (Updated: 12 Aug 2018 8:46 PM GMT)

அண்ணா பல்கலைக் கழக ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 6 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னையை சேர்ந்த ரிக்விக் சஞ்சீவ் முதலிடத்தையும், காஞ்சீபுரத்தை சேர்ந்த ஈஸ்வர் 2-வது இடத்தையும் பிடித்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முருகப்பா, ஸ்ரேயாஷ் ஆகியோர் முதலிடத்தையும், கவுசிக், விகாஸ் ஆகியோர் 2-வது இடத்தையும் பிடித்தனர். இதேபோன்று பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது.

விழாவிற்கு தர்மபுரி மாவட்ட இறகுப்பந்து சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். செயலாளர் தனசேகர் வரவேற்று பேசினார். பொருளாளர் கோபி, ஓய்வு பெற்ற விளையாட்டு அலுவலர் கிருபா மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு இறகுப்பந்து சங்க தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை விரைந்து செயல்படுத்த வேண்டும். மொரப்பூர்-தர்மபுரி இடையே ரெயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணைகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக எந்தவித பேச்சு வார்த்தையிலும் தமிழக அரசு கலந்து கொள்ளக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் செயல்படும்போது இது போன்ற பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவது நல்லதல்ல. சென்னை, சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட்டு விட்டு சென்னை, கன்னியாகுமரி இடையே 8 வழி சாலை பசுமை சாலை திட்டத்தை நிறைவேற்றினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி அடையும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உபரி நீரை நீரேற்று நிலையம் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

இந்த பேட்டியின் போது பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுசாமி, பாரிமோகன், மாநில நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, சத்தியமூர்த்தி, அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story